ஜூன் 12ம் தேதி, மும்பையில் இந்து, கிறிஸ்த மதத் தலைவர்கள் கலந்து கொண்ட ஒரு முக்கியமான மத உரையாடல் (inter faith dialogue) நிகழ்வு நடைபெற்றது.

photo courtesy: The Times of India
இதில், இந்துத் தரப்பிலிருந்து காஞ்சி காமகோடி பீடம் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவிகளான சுவாமி நிகிலேஷ்வரானந்தர் மற்றும் சுவாமி வாகீசானந்தர், ”வாழும் கலை” அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சுவாமி சிதானந்த சரஸ்வதி (பரமார்த்த நிகேதன், ரிஷிகேசம்), பிரம்மகுமாரிகள் ராஜயோக அமைப்பின் தலைவர் தாதீ ஜானகி, வேங்கடாசாரியார் சதுர்வேதி சுவாமி (ஸ்ரீ ராமனுஜர் மிஷன், சென்னை), சுவாமி விஷ்வேஷ்வரானந்த கிரி (சன்யாச ஆசிரமம், ஹரித்வார்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவத் தரப்பிலிருந்து ஜீன் லூயி பியரி டுரான் (வாத்திகன் போப் அரசின் அங்கமாக உள்ள மத உரையாடல்கள் கவுன்சிலின் தலைவர்) , பெட்ரோ லோபஸ் குவிண்டானா (இந்தியாவில் வாத்திகன் அரசின் தூதர்), கார்டினல் ஆஸ்வால்டு கிராசியாஸ் (மும்பை) மற்றும் ஆர்ச்பிஷப்கள் ஃபெலிக்ஸ் மாகாடோ (நாசிக்), தாமஸ் டாப்ரே (புனே), ராஃபி மஞ்சாலி (வாராணசி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னணி பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். கத்தோலிக்க திருச்சபையின் செயல்பாடுகளில் “மத உரையாடல்” (inter-faith dialogue) என்பதும் ஒன்று. ஊடகங்களில் இது கிறிஸ்தவத்தின் பரந்த மனப்பான்மையைப் பறைசாற்றுவதாகவும், பிறமதத்தவர்களுடன் கிறிஸ்தவ மதப்பரப்பாளர்கள் நல்லிணக்கத்துடன் இருக்க விரும்புகிறார்கள் என்பதற்கு சான்றாகவும் பெரிய அளவில் விளம்பரப் படுத்தப் படும். ஆனால் இதன் உண்மையான நோக்கம் கிறிஸ்தவம் அல்லாத மற்ற மதங்களையும் உண்மையானவை என்று அங்கீகரிப்பதோ அல்லது நேர்மையான, திறந்த மனதுடனான உரையாடலை நிகழ்த்துவதோ அல்ல. மாறாக, கிறிஸ்தவ மதமாற்ற வியூகங்கள் வகுக்கப் பட்டு, செயல்பாட்டில் இருக்கும் பிரதேசங்களில் அதற்கான சூழல் மற்றும் களம் எப்படியிருக்கிறது, அதனால் உருவாகும் சமூக மோதல்கள், எதிர்பாராத விளைவுகள் இவற்றை எப்படி சமாளிப்பது ஆகிய விஷயங்களில் வத்திகனுக்குத் தேவையான விவரங்களைத் திரட்டுவதும், எதிர்த் தரப்பின் பலம், பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதும் தான் உண்மையான நோக்கங்கள். இதை போப் மற்றும் வத்திகன் வட்டாரங்களே தங்கள் விசுவாசிகளுக்குப் பலமுறை தெளிவு படுத்தியிருக்கின்றனர்.
- சீதாராம் கோயல் கட்டுரை, தமிழில்
வெகுஜன பொதுப் புத்தியில் கிறிஸ்தவம் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தைக் கட்டமைக்கவும் இத்தகைய “உரையாடல் கூட்டங்கள்” உதவும் என்பதால் கத்தோலிக்க திருச்சபை முனைந்து இத்தகைய கூட்டங்களை நடத்தி வருகிறது. வழக்கமாக இத்தகைய கூட்டங்கள் கத்தோலிக்க சர்ச் அல்லது அமைப்புகளின் வளாகங்களிலேயே நடைபெறும். ஆனால் இந்தியாவில், மும்பைத் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான, ஆறுமுகன் பெயரில் அமைந்த ஷண்முகானந்தா ஹால் என்ற புகழ்பெற்ற அரங்கத்தில் தான் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
”சகிப்புத் தன்மையுள்ள நாடான இந்தியாவில், ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது ஏன் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, இத்தகையதொரு உரையாடல் கூட்டத்தினைக் கூட்டுவதற்கு கத்தோலிக்க திருச்சபை அழைப்பு விடுத்தது” என்று வாத்திகன் பிரதிநிதி தனது அறிமுக உரையில் கூறினார். இந்தியாவில் நடைபெறும் கிறிஸ்தவ மதப் பிரசாரங்கள், மதமாற்றங்கள் பற்றி அவருக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை, பாவம்.
ஆனால், இந்துத் துறவியர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கிறிஸ்தவ மதப்பிரசாரம் மற்றும் மதமாற்றங்களே என்பதை ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்துத் தரப்பின் நிலைப்பாட்டை முன்வைத்து ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆற்றொழுக்குப் போன்ற ஹிந்தியில் அருமையாக உரையாற்றினார். பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது உரையின் சாராம்சம், அறிக்கையாக வழங்கப் பட்டது. அந்த அறிக்கையின் மையமான கருத்துக்கள் -
[1] ஒரு மாதம் முன்பு இயேசு பிறந்ததாகக் கருதப் படும் ஜெருசலம் நகரில், இஸ்ரேல் நாட்டின் பிரதான யூத மதகுருவுடன் இதே போன்றதொரு உரையாடல் கூட்டத்தில் போப் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தின் முடிவில், போப் அவர்களும், யூத மதகுருவான ரபி யோனா மெட்சர் அவர்களும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது ரபி, கத்தோலிக்க திருச்சபை யூதர்களிடையில் மதப்பிரசாரங்களும் மதமாற்றங்களும் செய்யாது என்று போப் உறுதியலித்திருப்பதாகக் கூறி அதற்கு நன்றி தெரிவித்தார். அதே மேடையில் போப் அவர்களும் அமர்ந்திருந்தார், மறுப்பு ஏதும் சொல்லவில்லை, அதனால் அவருக்கு இதில் ஆட்சேபம் ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது. இதே போன்றதொரு உறுதிமொழியினை இந்துக்களுக்கும் போப் அளிக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
[2] இத்தகைய கூட்டங்களுக்குப் பின், இதில் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்துக்களைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையென்றால் கூட்டம் நடத்துவதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். இந்து உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளமாட்டோம் என்று சர்ச் இந்துக்களுக்கு உறுதியளிப்பதோடு, அதைப் பின்பற்றவும் செய்யாவிட்டால், இத்தகைய கூட்டங்களால் ஒரு பயனும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
[3] மறைந்த போப் இரண்டாம் ஜான் பால் அவர்கள் உலகம் முழுவதையும் கிறிஸ்தவ மயமாக்குவதே ஏசுவின் “இரண்டாம் வருக்கான” ஆயத்தம் என்றும், அதற்காக 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசியாக் கண்டம் முழுவதும் சிலுவையை வேரூன்ற வைப்பதே வாத்திகனின் குறிக்கோளும், செயல்திட்டமும் ஆகும் என்றும் 1999ஆம் ஆண்டு தன் இந்திய வருகையின் போது குறிப்பிட்டார். அப்படியானால், கிறிஸ்தவம் என்ற மதமே இல்லாத காலத்தில், உலகத்தைக் கிறிஸ்தவமயமாக்க சர்ச்சுகளும், திருச்சபைகளும் இல்லாத காலத்தில், ஏசுவின் முதல் வருகைக்கான காரண காரியம் என்ன என்பதை போப் அவர்கள் தான் தெளிவுபடுத்தவேண்டும்.
(கந்தமால் மற்றும் குஜராத் கலவரங்கள் பற்றி விசாரிக்க அமெரிக்க அரசு சார் அமைப்பான USCIRF இந்தியாவிற்கு வருகை தரப்போவதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு குறித்து கீழ்க்கண்ட கருத்து தெரிவிக்கப் பட்டது).
[4] அமெரிக்க மத சுதந்திரக் கண்காணிப்பு கமிஷன் (USCIRF – US Commission on International Religious Freedom) என்ற அமைப்பை , இந்த தேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிடும் வெளிநாட்டு அரசின் கருவியாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த அமைப்பு இந்தியாவிற்கு வருகை புரியவும், இந்த நாட்டின் மத சுதந்திரம் பற்றி மதிப்பீடு செய்யும் முகமாக மக்களுடன் உரையாடவும் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அறிகிறோம். உள் தலையீட்டு நோக்கத்துடன் வரும் இந்த அமைப்பினை அனுமதிக்கக் கூடாது. நம் நாட்டின் உள்விவகாரங்களில் இத்தகைய தலையீட்டை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
[5] சர்ச்சுகளுக்காகவும், கிறிஸ்தவ குழுக்களுக்காகவும் மிகப் பெரிய அளவில் நன்கொடைப் பணம் “சேவைப் பணிகளுக்காக” என்ற பெயரில் இந்த தேசத்துக்குள் வந்து கொண்டிருக்கிறது என்பதனை நாங்கள் அறிவோம். இந்தப் பணம் சுகாதாரம், கல்வி முதலிய சமூக நலப் பணிகளுக்காக மட்டுமே செலவிடப் பட வேண்டும்; மதமாற்றங்களுக்காகச் செலவிடப் படக் கூடாது. சேவை நிறுவனத்தை எந்த மதத்தினர் நடத்துகின்றனர் என்று பாராமல், சேவை செய்யும் அனைத்து அமைப்புகளுக்கும் இந்தப் பணம் பகிர்ந்தளிக்கப் படவேண்டும் என்று இந்த உரையாடல் கூட்டத்தில் முன்மொழிகிறோம். ஒரு பொது நிதியை உருவாக்கி, இந்தப் பணத்தைப் பகிர்ந்தளித்து, அதன் பயன்பாடுகளைக் கண்காணிக்க ஒரு கமிட்டியும் நிறுவப் படவேண்டும்.
[6] கிறிஸ்தவ மிஷநரிகள் இந்துக்களை மதமாற்றுவது எளிதாகி வருவது போலத் தோன்றுகிறது. அதனால், அனைத்து இந்து அமைப்புகளும், சங்கங்களும் ஒன்றிணைந்து இந்துக்களிடையே புரிதலை உருவாக்கவும், மதமாற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கவும் பணியாற்ற வேண்டும்.
[7] இந்து தர்மம் இயல்பாகவே பன்முகத் தன்மை கொண்டது. அதனால் பல்வேறு வகையான மார்க்கங்களும், மரபுகளும் இந்த மண்ணில் ஒன்றையொன்று அழிக்கவெண்டும் என்ற தேவை இல்லாமல் அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்து தர்மம் பல்வேறு விதமான நம்பிக்கைகளையும் மதங்களையும் செழித்து வளரச் செய்திருக்கின்றது; அதுவே தர்மத்தின் வழி. மற்ற நாடுகளிலிருந்து இந்த மண்ணிற்குள் வந்திருக்கும் மற்ற மதங்களும் இந்த முக்கியமான இலக்கணத்தை மதிக்க வேண்டும் என்றும், இந்த நாட்டின் தேசியத்தனமையைக் குலைக்கவோ, அழிக்கவோ கூடும் எந்தச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்து தர்மமும் சரி, இந்து மக்களும் சரி, இந்தத் தேசத்தைத் தங்கள் இல்லமாகக் கொள்ள கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும், பார்சிக்களையும், யூதர்களையும் வரவேற்கின்றனர். அதே நேரத்தில், இந்த மதங்கள் எங்கள் மதத்தை அழிக்கவோ அல்லது மத உணர்வுகளைப் புண்படுத்தவோ கூடாது என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அனைத்து மதங்களும் பரஸ்பரம் மரியாதையுடனும், சமநிலையுடனும், நம்மை ஒரு தேசமாகப் பிணைக்கும் தேசிய உணர்வுடன் வாழவேண்டும் என்பதையே நாங்கள் விழைகிறோம். இந்த தேசிய உணர்வே முதன்மையானதாக இருக்கவேண்டும்.
[8] கிறிஸ்தவ சர்ச்சுகளும், அமைப்புகளும் மதம் மாறுபவர்களின் நோய்களையும், உடல் பிரசினைகளையும் தீர்த்து வைப்போம் என்று வெளிப்படையாகப் பிரசாரங்கள் செய்வதனை நாங்கள் அறிவோம். இது 1954-ஆம் வருடத்திய இந்திய மருந்துகள் சட்டப் படி (DRUGS AND MAGIC REMEDIES ACT) குற்றமாகும். இந்தக் குற்றம் புரிபவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
[9] அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், மத்தியக் கிழக்கு தேசங்கள், இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளில், அந்த நாடுகளின் அரசுகளும், மரியாதைக்குரிய மதநிறுவனங்களும் இணைந்து, தங்கள் தேசிய கலாசாரத்தின் ஊற்றுமுகமாக விளங்கக் கூடிய மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியுடன் கூடிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இந்தியாவில் மட்டும் தான், மதம்-தவிர்த்த, ஆன்மிகம்-தவிர்த்த ”மதச்சார்பின்மை” என்று பெயரிடப்பட்ட ஒரு ஜந்துவை, அதிகாரபூர்வமாகவும், சட்டபூர்வமாகவும் வளர்ப்போம் என்று நாம் தீர்மானங்கள் நிறைவேற்றி வருகிறோம்.
மதச்சார்பின்மை என்பது நிர்வாகத்திற்கான ஒரு முக்கியத்தேவை தான். ஆனால் அதுவே இந்த தேசத்தின் ஆன்மா ஆகிவிட முடியாது. இந்த தேசத்தின் ஆன்மா இந்து தர்மத்திலும், ஆன்மிகத்திலும் தான் இருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து, இந்த தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாப்போம் என்பதில் உறுதியுடன் நிற்குமாறு நமது அரசையும், அனைத்து முக்கிய மத நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
[10] இலங்கையின் புத்த மகாசங்கமும், புத்த அமைப்புகளும் அந்த நாட்டின் அரசு மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளன. அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
[11] கலாசார உள்ளீடு (inculturation) என்ற மதப்பிரசார யுக்தியின் கீழ், வேதம், ஆகமம், ரிஷி, ஆசிரமம், ஓம் போன்ற பற்பல இந்து மத கலைச் சொற்களையும், வாசகங்களையும், சின்னங்களையும் இந்திய கிறிஸ்தவ அமைப்புகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும். எங்கள் சமூகத்தில் தளர்ந்த நிலையில் இருக்கும் சில மக்களை மதமாற்றத்திற்காகக் குறிவைத்து அவர்களை ஏமாற்றும் செயல் தான் இது என்பதில் ஐயமில்லை. மேலும், இது இந்துக்களின் மத உணர்வுகளை அவமதிப்பதாகவும், காயப் படுத்துவதாகவும் இருக்கிறது. சில சர்ச்சுகள் வேதங்கள், உபநிஷதங்கள், கீதை, புராணங்கள் இவற்றிலுள்ள பகுதிகளைத் திருடிச் சேர்த்து ”புதிய இந்திய பைபிள்” என்று ஒரு பைபிளை உருவாக்கியிருப்பதாகவும் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த பைபிள் பிரதிகள் பொதுச் சுற்றில் இருந்தால் அவற்றை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். இந்திய அரசு இந்தப் பிரசினையை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
0 comments:
Post a Comment