skip to main |
skip to sidebar
மஹாபாரத உரையாடல்கள் – 001 கற்றலும் சாதியும்
வியாச பாரதம், வில்லி பாரதம், பாஞ்சாலி சபதம் போன்ற மஹாபாரதத் தலைப்புகளில் நண்பர்கள் அவ்வப்போது தனிமடல்களிலும், சிற்சில குழுக்களிலும் ஐயங்கள் எழுப்பி வருகிறார்கள். அவற்றுக்கு நான் அளித்துவரும் விடைகளை ஒரு பொதுத் தளத்தில் இட்டு வைப்பது நல்லது என்று பலரும் அபிப்பிராயப்பட்ட காரணத்தால், தமிழ்இந்து தளமே அதற்குப் பொருத்தமான தளம் என்று கருதி இங்கே அந்த விவாதங்களை இடத் தொடங்குகிறேன். பாரதத்தில் பல்வேறுபட்ட தலைப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன. கேள்விகளையும் விடைகளையும் வரிசையாக இடுவதாக உத்தேசித்திருக்கிறேன். ஐயங்களை எழுப்பிய நண்பர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய ஐயங்களையும், என் விளக்கங்களையும் இந்தப் பக்கங்களில் பதிகிறேன். தன் பெயரை இடவேண்டாம் என்று கேட்டுக் கொண்ட நண்பர்களுடைய பெயர்கள் உடுக்குறிகளால் (*******) காட்டப்படும். மற்றவர்களுடைய பெயர்கள் இடம்பெறுகின்றன.
வாசகர்கள் பங்குபெற விரும்பினால், வாசகர்களுக்கு ஐயங்கள் இருந்தால் அவையும் வரவேற்கப்படுகின்றன. கேள்விகளை editor@tamilhindu.com முகவரிக்கு அனுப்பலாம். தெரிந்தெடுத்த கேள்விகள்/ஐயங்களை விளக்கவும் விவாதிக்கவும் செய்யலாம். தளத்தின் நோக்கத்துக்கும் கொள்கைக்கும் பொருத்தமான கேள்விகளைத் தேரும் உரிமை ஆசிரியர் குழுவைச் சார்ந்தது.
முதல் இடுகை, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நண்பரின் கேள்வியோடு தொடங்குகிறது. இந்தப் பக்கங்களில் நான் மேற்கொள்ளப் போகும் நிலைப்பாட்டுக்கு விளக்கமாக இதைச் சேர்த்துக் கொள்கிறேன்.
****** எழுதியது:

இங்கே விவாதம் திசை திரும்புகிறது என்று நினைத்தாலும் நீங்கள் துரோணர் பற்றி எழுதியதால் இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் ஆசிரியர். ஆசிரியர் பணி என்பது பிராம்மண வர்ணத்தைச் சேர்ந்தது. ஆனால் கர்ணன் தொடையில் வண்டு துளைக்கும்போது அவன் க்ஷத்திரியன் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள் அல்லவா அப்போதே ஒருவனின் பிறப்பை வைத்து இவன் இப்படித்தான் செயல்படுவான் என்று நினைப்பது இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
அன்புள்ள ******,
இந்த விவாதங்களுக்குள் நுழைவதற்கு முன்னால் ஒரு சிறிய தன்னிலை விளக்கம் கொடுத்துவிடுகிறேன்:
1) நான் உள்ளதை உள்ளபடி மட்டும்தான் எழுதுவேன் ஆகவே, எழுதியது எல்லாமும் என் கருத்து என்று முத்திரையிட்டுவிட முடியாது. அங்கே என்ன இருக்கிறதோ அதைச் சொல்வேன். அத்தனையையும் நான் ஒப்புக்கொண்டேனா, இல்லையா என்ற முடிபுகளுக்கு இவை இடம் தாரா. ஒருவேளை அவ்வாறு யாரும் முடிவுகளுக்கு வந்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. எப்படி இருந்தாலும் அவை என்னைக் கட்டுப்படுத்தான் போவதில்லையே.
2) சில உண்மைகள் சிலருக்கு வருத்தத்தைத் தரலாம் ‘நான் அங்கே அவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறேன்’ போன்ற பலவிதமான எதிர்வாதங்கள் எழலாம் அவ்வாறு எழுந்தால், புதியனவாக ஏதும் கருத்துகள், உண்மைகள், தெளிவுகள் ஏற்படுமாயின் அவற்றைக் கற்றுக்கொள்ள நானும் முயல்வேன் ஆனால், தேவையற்ற விவாதம் என்று எனக்குத் தோன்றுவனவற்றுக்கு நான் விடை சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன் அவ்வாறு நான் விடுத்து, அவசியமாக நான் விடையளித்தே ஆகவேண்டும் என்று நண்பர்கள் கருதுபவனவற்றச் சுட்டிக் காட்டினால் என்னால் இயன்றவரை விடையளிக்க முயல்வேன்.
3) இப்படி, பலவிதமான பதிப்புகள் இருந்து, பலர் பலவிதமாக அபிப்பிராயப்பட இடங்கொடுக்கும்படியான ஆய்வுகளும், முடிபுகளும் நிறையவே இருக்கின்றன. ஆனால், நான் பேசுவது மூலநூல்களான வியாச பாரதம் (நெருக்கமான மொழிபெயர்ப்பாகக் கருதப்படும் கிஸாரி மோகன் கங்கூலியின் பதிப்பு, மற்றும் சமஸ்கிருதப் பதிப்பு), வில்லி பாரதம் போன்றவற்றின் அடிப்படையில் பேசப்படுபவை, என்னிடம் உள்ள பதிப்புகள் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை, எனவே, நான் இங்கே சொல்வன எல்லாமும் என்னிடமுள்ள பதிப்புகளின் அடிப்படையில் மட்டுமே என்பதை முதலில் தெளிவாக்கி விடுகிறேன். இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு There are as many Ramayans as there are scripts என்பது இராமாயண ஆய்வாளரான வின்டர்நீட்ஸ் சொல்வது. எத்தனை ஓலைச் சுவடிகள் உள்ளனவோ அத்தனை இராமாயணங்கள் உள்ளன என்பதும் உண்மையே ஒவ்வொரு பிரதியிலும் சின்னச் சின்ன மாறுதல்கள் தெரியும். அவற்றையெல்லாம் ஒரு நிலைப்படுத்தி ஒரு standard recension கொண்டுவந்துவிட்டனர் என்னிடம் உள்ள recensions அப்படிப்பட்டவையே ஆகவே நான் இந்தப் பதிப்புகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்ற நம்புகிறேன்.
4) வர்ணம் முதலியனவற்றில் எனக்கு ஈடுபாடு கிடையாது நான் அந்த நோக்கில் இவற்றைப் பயின்றதும் இல்லை இருந்தபோதிலும், ‘எதிரியே வந்து கேட்டாலும் அவன் வெல்வதற்கு முகூர்த்தம் குறித்துக் கொடுப்பது என் கடமை’ என்று சொன்ன சகாதேவனைப் போல், என் கருத்துக்கு இடம் கொடாமல் உள்ள உண்மைகளை உள்ளவாற எடுத்து வைக்கிறேன் இந்த உவமை முற்றிலும் பொருத்தமான ஒன்றன்று இங்கே என்னைக் கேட்பவர்கள் என் எதிரிகளுமல்லர்; அவர்கள் வெல்வதற்கு நான் வழி சொல்லவும் இல்லை ஆயினும் நடுவுநிலைமை என்ற மனப்பாங்குக்கு உதாரணமாக மட்டுமே இதைச் சொன்னேன். மேலே சொல்லியிருப்பவை என் நிலைப்பாட்டைத் தெளிவாக்கும் என்ற நம்புகிறேன் வாதப் பிரதிவாதங்களைக் காட்டிலும் ஐய வினாக்களுக்க விடையளிப்பது மட்டுமே என் பணி என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன் Treat me as a resource person and not as a rival to compete with ‘பிறரைக் காட்டிலும் நான் மேம்பட்டவன்’ என்ற நிறுவவேண்டிய அவசியம் எனக்கில்லை அவ்வாறு நான் கருதவுமில்லை. ****** அவர்கள் மேற்படிப் பத்தியில் சொல்லியிருக்கும் விவரங்களில் அடிப்படை உண்மை இருந்தாலும், அவற்றின் கான்டெக்ஸ்டிலிருந்து சற்றே விலகுகின்றன. கான்டெக்ஸ்ட் இல்லாமல் எதையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது என்பத என்னுடைய உறுதியான நம்பிக்கை இவற்றையும் விளக்க அடுத்த மடலிலிருந்த முற்படுகிறேன்.
(இங்கிருந்து விவாதங்கள் தொடர்கின்றன)
முதலில் இந்த மடல் சொல்கின்ற சில செய்திகளை எடுத்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பத்தியாகத் தனித்தனியே பேசுகிறேன்.
வில்வித்தை அல்லது தனுர் வேதம் என்றழைக்கப்படும் துறையிலும் அந்தணர்களுக்குப் பயிற்சி இருந்திருக்கிறது (தேவையான இடங்களில், ‘அந்தணர்களில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு’ என்று பொருள் கொள்ளவும்.) க்ஷத்திரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கத்துடனேயே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்று கருத இடமுண்டு அவ்வாறே ‘தெய்வத்தின் குரல்’ தொகுதிகளிலும் பெரியவர் சொல்கிறார்.
துரோணருடைய தந்தையான பரத்வாஜரும், கிருபருடைய தந்தையான சரத்வானும் இந்தப் பயிற்சிகளில் சிறந்து விளங்கினவர்கள் என்பதற்கான குறிப்புகள் மஹாபாரதத்தில் உள்ளன. துரோணரும் கிருபரும் வில்வித்தை பயின்றதும், பயிற்றுவிப்பதற்கான நோக்கத்துக்காகவே என்பதும் தெளிவு, துரோணர் தன் தந்தையிடம் பயின்றார் கிருபரையும் அவருடைய சகோதரியான கிருபியையும் சந்தனு காட்டில் கண்டெடுத்துத் தன் அரண்மனையில் வளர்த்து வருகையில் கிருபருக்கும் தனுர் வேதப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தனுர் வேதம் என்பது வில்லையே பொதுவாகக் குறித்தாலும், வில், வாள் என்பன ஆயுதங்களுக்கு உரிய பொதுப் பெயர்கள் ஆகவே, தனுர் வேதம் என்றால் வில்வித்தை என்பது மட்டுமில்லை; வாள், வேல், கதை இன்ன பிற ஆயுதங்களையும் சேர்த்துப் பொதுவாக ஆயுதப் பயிற்சி என்பதையே குறிக்கிறது.
ஆனால் துரோணர் பின்னர் அரசரானார் பாஞ்சால மன்னனுடன் அவருக்கிருந்த வேறுபாடுகளை அடிப்படையாக வைத்து, தன் மாணவர்களை அவனோடு பொரச் செய்து, பாஞ்சால நாட்டை வென்று, அதில் ஒரு பாதியைத் தான் எடுத்துக் கொண்டு, மற்றதைப் பாஞ்சால மன்னனுக்கே தந்து, ‘இப்போது நீயும் நானும் சமம்’ என்ற தம் வேறுபாடுகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார் துரோணர் ஆனால் வேறுபாடுகள் அத்துடன் முடிந்துவிடவில்லை க்ஷத்திரிய கோபம் அவ்வளவ சீக்கிரத்தில் ஆறாது என்பதும் மஹாபாரதம் சொல்லும் செய்திகளில் ஒன்று. அதனால்தான் பாஞ்சாலன், துரோணரைக் கொல்வதற்காக யாகம் செய்த திருஷ்டத்யும்னனைத் தோற்றுவித்தான் அதற்குள் இப்போது நுழைய வேண்டாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
கர்ணனை சூத புத்திரன் என்று அழைத்திருப்பது உண்மையே ஆனால், சூதன் என்ற சொல்லுக்கு ‘சூத்திரன்’ என்ற பொருள் இல்லை இந்திரா பார்த்தசாரதி போன்ற பெரியவர்கள் அப்படி எழுதியிருந்தாலும், அந்தச் சொல்லுக்கு அப்படி ஒர பொருள் அகராதிகளில் கிடைக்கவில்லை ‘பாணன்’ என்ற ஒரு பொருள் இந்தச் சொல்லுக்கு உண்டு மஹா பாரதக் கதையைச் சொல்பவரே (வியாசரிடமிருந்த கற்றுக் கொண்டு ஜனமேஜய ராஜாவின் சத்ர யாகத்தின் போது வந்திருந்த) ரோமஹர்ஷணர் என்ற சூதர்தான் அவரை அந்தணர்கள் வரவேற்று உபசரித்து, அர்க்கியங்கள் கொடுத்து, கதையை அவர் வாயிலாகக் கேட்கத் தொடங்குகின்றனர். பிறகு வைசம்பாயனர் கதை சொல்லச் சேர்ந்துகொள்கிறார்.
சூதன் என்ற சொல்லுக்குத் தேரோட்டி என்ற பொருள் உண்டு தேரோட்டி, சூத்திரன் இல்லை. இதைப் பற்றிய முக்கியமான மஹாபாரதக் குறிப்பு ஒன்றை (கர்ணன் வாய்மொழியாகவே வரும் பொருள் வரையறையைப்) பின்னால் பார்க்கலாம். பின்னால், விராட பர்வத்தில் கீசகனைப் பல சமயங்களில், பல இடங்களில் பாஞ்சாலி ‘சூத புத்ர’ என்றே அழைப்பதைப் பார்க்கலாம்.
தேரோட்டி மகன் என்ற எள்ளலுக்குப் பலமுறை–குறிப்பாக பீமனால்–கர்ணன் ஆளாகியிருக்கிறான். பாஞ்சாலி, சுயம்வரத்தின்போது, ‘நான் சூதனை வரிக்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறாள். ஆனால், கர்ணனை துரியோதனன் உள்ளிட்ட ஏனையோரும், மிகக் அன்புடனும் மரியாதையுடனும் ‘சூத புத்ரா!’ என்று அழைப்பதைப் பார்க்கலாம். இதற்கான வியாச பாரத ஆதாரங்களைப் பின்னர் இடுகிறேன். ஆகவே, ‘சூத புத்திரன்’ எனப்படும் விளி வெறும் எள்ளல் குறிப்பு மட்டுமே அன்று. பீமன் மட்டுமே, அல்லது பாண்டவர்கள் மட்டுமே, அல்லது கர்ணனுக்கு எதிரானவர்கள் மட்டுமே இவ்வாறு அழைத்திருந்தால் அதை அவ்வாறு கொள்ள இயலும். துரியோதனன், திருதிராஷ்டிரன் உள்ளிட்ட, கர்ணனிடம் பேரளவில் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்களும் அப்படி அழைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, இந்த விளியில் எள்ளல் இல்லை. இப்படிப் பொதுவாகவே அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வரமுடிகிறது.
ஆனால், வண்டு துளைத்ததை வைத்து அவன் க்ஷத்ரியனே என்று கண்டறிந்ததற்கும் இதற்கும் தொடர்பில்லை பரசுராமர் க்ஷத்ரியர்களை அழிப்பதை விரதமாக மேற்கொண்டிருந்தவர் ஆகவே க்ஷத்திரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் அவரிடத்தில் ‘நான் பிராமணன்’ என்று கர்ணன் பொய் சொன்னதன் காரணத்தால், ‘நீ பிராமணன் இல்லை; க்ஷத்ரியன்’ என்ற பரசுராமர், தான் அவ்வாறு முடிவுக்கு வந்ததன் காரணத்தைச் சொல்லிச் சபிக்கிறார்.
ஆனால், பரசுராமர் க்ஷத்ரியர்களில் ஒருவருக்கும் பயிற்சி அளிக்கவில்லையா என்று கேட்டால், ‘அது அப்படியில்லை, க்ஷத்ரியர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார்’ என்றுதான் விடை சொல்ல வேண்டியிருக்கும். பீஷ்மருடைய குரு யார்? பரசுராமர்தானே!அவர் க்ஷத்ரியர் இல்லையா! பிறகு ஏன் அவருக்குக் கற்பித்தார்! இதற்கு விடை காணப் புகுந்தால் திசை மாறும் எனவே இங்கே இதனை விட்டுவிடுகிறேன்.
கற்பிப்பதில் சாதி பார்த்தார் என்று துரோணர் மேல் ஒரு குற்றச்சாட்ட உண்டு கர்ணன் தொடக்க நாளில் துரோணரிடம் பயின்றவன்தான் துரியோதனனும் கர்ணனும் சேர்ந்துகொண்டு, பயிற்சி பெற்ற காலங்களில் பாண்டவர்களைச் சதா காலமும் சீண்டிக் கொண்டிருந்ததற்கான குறிப்புகள் நிறையவே இருக்கின்றன. இவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் தருகிறேன்.
சாதி என்ற திறக்கில் பார்த்தால், அடுத்ததாக ஏகலவ்யன் (ஏகலைவன் இல்லை; ஏகலவ்யன்) கதைக்குள் இட்டுச் செல்லும் ஏகலவ்யன் ஏதோ ஓர் ஏழை வேடன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு ஹிரண்யதனுஸ் என்ற நிஷாத ராஜனுடைய மகன் ஏகலவ்யன் நிஷாதன் என்பது வேடர் இனத்தைத்தான் குறிக்கும்; ஆயினும் ஏகலவ்யன் வேடர் குலத்து அரசனுடைய மகன் ‘அவன் பின்னால் என்ன ஆனான் என்பது தெரியவே இல்லை’ என்றெல்லாம் (பாலகுமாரன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள்) சொல்லியிருக்கிறார்கள் ஏகலவ்யன் பின்னாளில் அரசாண்டான்; தரும புத்திரன் நடத்திய ராஜசூய யாகத்துக்கு வந்திருந்தான்.
“பற்றலர் அஞ்சும் பெரும்புகழ் ஏகலவியனே – செம்பொன்
….. ….. …..பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும்”
என்று பாரதியின் பாஞ்சாலி சபதம் பேசுகிறது; ‘ஏகலவ்யனுக்கு ஏன் முதல் மரியாதை செய்யக் கூடாது?’ என்று சிசுபாலன் அர்க்யாஹரண பர்வத்தில் கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்வதைக் குறித்துக் கேட்கிறான் (“When the invincible Bhishmaka and king Pandya possessed of every auspicious mark, and that foremost of kings–Rukmi and Ekalavya and Salya, the king of the Madras, are here, how, O son of Pandu, hast thou offered the first worship unto Krishna? “),
ஏகலவ்யனுக்குப் பயிற்சி அளிக்காகதற்கு சாதி மட்டுமே காரணமாக இருந்திருக்கவில்லை தான் யாருக்காகப் பணியாற்றகிறோமோ அந்த மன்னனுக்க எதிரான சக்தியாக இவன் வளர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக துரோணர் கருதியதன் விளைவே அது பின்னால் யுத்தத்தில் துரியோதனுடைய பக்கத்தில் நின்ற போரிட்டவர்களில் ஏகலவ்யனும் ஒருவன் என்பதையும் கவனிக்க வேண்டும்.
சாதி என்பதைக் காட்டிலும் அரசியல் என்பதே சரியான காரணமாக இந்தக் குறிப்பிட்ட விஷயத்துக்குப் பொருத்தமான ஒன்றாக இருக்க முடியும். சாதியைக் காரணம் காட்டி ஏகலவ்யனை துரோணர் விலக்கினார் என்றால், கர்ணனை ஏன் விலக்கவில்லை? அவனுக்கு ஏன் பயிற்சியளித்தார்? ஒன்று, கர்ணன் எதிரியாக மாறக்கூடிய வாய்ப்பு இருந்திருக்வில்லை என்பதாக இருக்க வேண்டும்; இல்லை, சாதிதான் காரணம் என்றால், கர்ணனுடைய ‘சூத புத்திர’ நிலைப்பாட்டில், ‘சூதன்’ என்பது விலக்கப்பட வேண்டிய, பயிற்சிக்க ஏற்புடையதாகாத இனத்தைச் சேர்ந்தவன் என்பது தவறாக இருக்க வேண்டும். இல்லையா? நான் இவற்றில் முன்னதான காரணத்தையே பெரிதும் ஏற்புடையதாகக் கருதுகிறேன்.
அப்படி ஏற்புடையதானால், ஏகலவ்யன் விஷயத்திலும் அரசியல் நிலைப்பாடே காரணமாக இருக்க முடியும் சிறிய, அல்லது குறுநில மன்னர்களை வளரவிடாமல் பார்த்துக் கொள்வதும் அரசனுடைய அவசியத் தேவைகளில் ஒன்றாக இருந்தது. இந்தக் காரணத்தால்தான், ‘நான் உன்னோடு வருகிறேன்’ என்று அனுமன் சொன்ன நேரத்தில், கார்காலப் படலத்தில் தனியே தங்கப் போன இராமன் அனுமனுக்குப் பின் வருமாறு சொல்கிறான்:
‘நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற
வரம்பு இலாததனை, மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால்,
அரும்புவ, நலனும் தீங்கும்; ஆதலின், ஐய! நின்போல்
பெரும் பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது அம்மா!
வாலி இப்போதுதான் வீழ்ந்து, சுக்ரீவன் அரசேற்றிருக்கும் இந்த நிலையில், ‘அரும்புவ நலனும் தீங்கும்’ நல்லதும் நடக்கும்; அல்லதும் நடக்கும் ஆகவே அவற்றை எதிர்கொள்ளத் தக்க துணைவனாக நீ இப்போது சுக்ரீவன் பக்கத்தில் இருப்பதே சரியானது’, அல்லதும் நடக்கும் என்றால் அதற்கு என்ன பொருள்? கம்பனே வேறொரு இடத்தில் விடை சொல்கிறான்:
உரை செய் திகிரிதனை உருட்டி, ஒரு கோல் ஓச்சி, உலகு ஆண்ட
அரைசன் ஒதுங்க, தலை எடுத்த குறும்பு போன்றது, அரக்கு ஆம்பல்.
(பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம், பாடல் 75)
பேரரசன் ஒருவன் சற்றே அயர்ந்தானானால் ‘குறும்பு தலை எடுப்பதைப் போல’ ஆம்பல் மலர்ந்தது குறும்பு என்றால், குறுநில மன்னன், சிற்றரசன், chieftain என்பது பொருள்.
****** அவர்களுடைய மடலின் மற்ற பத்திகளுக்குச் சற்றுப் பொறுத்து வருகிறேன்.
(விவாதப் பதிவுகள் தொடரும்)
0 comments:
Post a Comment