Bookmarks

Blogger Gadgets

Pages


கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?

பெரும்பான்மையினரின் கருத்து ஏற்கப்படுவதே ஜனநாயகம் என்று கூறப்படுவதுண்டு. 49 பேர் ஆதரித்தாலும், அதை 51 பேர் எதிர்த்தால் எதிர்ப்பாளருக்கே வெற்றி கிடைக்கும் என்பது தான் வாக்களிக்கும் ஜனநாயகத்தின் அடிப்படை. இதெல்லாம், சிறுபான்மை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைத் தான் மத்திய அரசில் அவ்வப்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தெரியப்படுத்தி வந்திருக்கிறது சோனியா தலைமையிலான காங்கிரஸ். அவரது சிஷ்யரான ஓமன் சாண்டி ஒருபடி மேலே சென்றுவிட்டார். தனது தலைமையிலான 22 பேர் கொண்ட கேரள அமைச்சரவையில் சிறுபான்மையினரின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தி, தங்கள் கட்சி யாருக்கு சாதகமானது என்பதை முரசறைந்து அறிவித்திருக்கிறார் அவர்.
கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டசபை உறுப்பினர்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 72 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்த்தரப்பில் இடது  ஜனநாயக  முன்னணிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர் (மா.கம்யூ எம்.எல்.ஏ ஒருவர் பதவி விலகியதால் ஒரு இடம் காலியாக உள்ளது). ஐ.ஜ.முன்னணியில் காங்கிரஸ் கட்சியின் பலம் 38; முஸ்லிம் லீக் கட்சியின் பலம் 20. கூட்டணியில் உள்ள கிறிஸ்தவர்களின் கட்சிகளாக அறியப்படும் கேரள காங்கிரஸ் கட்சிகளின் இரு பிரிவுகளுக்கும் எம்.எல்.ஏக்கள் உண்டு.
அண்மையில் நடந்த பிரவம் இடைத்தேர்தலில் கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) சார்பில் வென்ற அனுப் ஜேக்கப் அமைச்சரானபோது, சாண்டியின் அமைச்சரவையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை (அவரையும் சேர்த்து) 6 ஆக உயர்ந்தது. அவருடன் மஞ்சாலம் குழி அலி பதவி ஏற்றபோது, அமைச்சரவையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மொத்தத்தில் 22 பேர் கொண்ட சாண்டி அமைச்சரவையில் இப்போது சிறுபான்மையினரின் எண்ணிக்கை 12!
கேரளாவின் மக்கள்தொகை விகிதாசார அடிப்படையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 56.2 சதவீதம்; இஸ்லாமியர்கள்- 24.7 சதவீதம்; கிறிஸ்தவர்கள்- 19 சதவீதம். காஷ்மீர்,  வடகிழக்கு மாநிலங்கள் தவிர்த்த நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கேரளாவில் தான் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகம். கேரள அரசியலில் மிகவும் செல்வாக்கு செலுத்துபவர்களாக சிறுபான்மையினர் மாறி உள்ளனர். அவர்களது ஒட்டுமொத்த அளவான 44  சதவீதம் வாக்குகளைப் பெறவே காங்கிரஸ் கூட்டணியும்  கம்யூனிஸ்ட் கூட்டணியும் போட்டியிடுகின்றன. கேரளாவில் பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தும் தேர்தலில் வெற்றி பெற இயலாமல் போவதற்கு இந்த மக்கள்தொகை மாறுபாடே காரணம்.
இந்நிலையில் தான், ஏற்கனவே 4 அமைச்சர்களைக் கொண்டிருந்த முஸ்லிம் லீக், அமைச்சரவையில் தனக்கு கூடுதலாக ஓரிடத்தை அளிக்குமாறு நிர்பந்தம் செய்தது; அல்லது ராஜ்யசபைக்கு தங்கள் கட்சியைச் சேர்ந்தவரை அனுப்ப வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக கேரளா மாநில காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த விவாதம் நடந்து வந்தது. நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அரசைக் காக்க  முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலோர் லீகின் நிர்பந்தத்தை ஏற்கக் கூடாது என்றே கூறினர். ஆயினும்,  கட்சியினரின் கருத்துக்களை மீறி, இப்போது லீகின் சார்பில் ஐந்தாவதாக ஒருவர் அமைச்சர் ஆகி இருக்கிறார். இது கேரளாவில் பலத்த அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் உருவாக்கி இருக்கிறது.
கேரளாவில் சிறுபான்மையினரின் வாக்குகளை நம்பியே காங்கிரஸ் கட்சி இயங்கி வந்துள்ளது. கருணாகரன் இருந்தவரை, அவரால் கட்சிக்குள் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க முடிந்தது. சோனியா வரவுக்குப் பின் அவரது நிலைமையே மோசமாகிவிட்டது. இப்போது அவரும் இல்லை. இன்றைய காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோணி (தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர்), முதல்வர் ஓமன் சாண்டி ஆகிய தலைவர்களின் பின்புலத்தில் தான் தாக்குப் பிடிக்கிறது.
அதனால் தான், அரசின் தலைமைக் கொறடாவாக, கூட்டணிக் கட்சியான கேரள  காங்கிரஸ் (மானி) பிரிவைச் சேர்ந்த பி.சி.ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உண்டு. இக்கட்சி கிறிஸ்தவர்களின் கட்சி என்றே தன்னை அறிவித்துக் கொள்ளும் கட்சி. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.ஜார்ஜ், ”கேரளாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினர் என்பது வெறும் மாயை” என்று கூறி இருக்கிறார். உறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் சரி.
சாண்டி அமைச்சரவையில் இதே கட்சியின் கே.கே.மானி, பி.ஜே.ஜோசப் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாது ஆர்.எஸ்.பி (பி) பிரிவின் ஷிபு பேபி ஜான், காங்கிரஸ் கட்சியின் கே.ஜோசப், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்)  பிரிவின் அனுப் ஜேக்கப்  ஆகிய கிறிஸ்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். முதலமைச்சர் சாண்டியுடன்  சேர்த்தால் அமைச்சரவையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 6!
வெறும் 19 சதவீதம் உள்ள கிறிஸ்தவர்களுக்கே 6  அமைச்சர்கள் என்றால், 24.7 சதவீதம் உள்ள இஸ்லாமியர்களுக்கு 5 அமைச்சர்கள் தானா? என்று முஸ்லிம் லீக் கேட்டது. அதிலுள்ள நியாயத்தைப் ‘புரிந்துகொண்டு’ தலைவணங்கி இருக்கிறது காங்கிரஸ். இப்போது முஸ்லிம் லீக் சார்பில், பி.கே.குன்னாலி குட்டி, பி.கே.அப்து ரப், வி.கே.இப்ராஹீம் குஞ்சு, எம்.கே. முனீர், மஞ்சாலம் குழி அலி ஆகியோர் (மொத்தம் 5) அமைச்சர்கள் ஆகி உள்ளனர். காங்கிரஸ் சார்பில் அமைச்சராக உள்ள இஸ்லாமியரான ஆர்யாதன் முகமதுவுடன் சேர்த்தால் சாண்டி அமைச்சரவையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 ஆகிறது!
இதைவிட முக்கியமான விஷயம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், கல்வி, பொதுப்பணி, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கியமான துறைகள் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மீதமுள்ள 10 பேரும் ஹிந்துக்கள். மொத்தத்தில், 56.2 சதவீதம் உள்ள ஹிந்துக்கள் தானே கிள்ளுக்கீரை? இந்த பாரபட்சத்தை எதிர்த்து பாஜக திருவனந்தபுரத்தில் அழைப்பு விடுத்த கடையடைப்புக்கு பெருவாரியான ஆதரவு இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் இந்த மண்டியிடுதல் கண்டு முன்னாள் முதல்வர் அச்சுவும் கூட வருத்தம் தெரிவித்திருக்கிறார். ”காங்கிரஸ் கட்சி தனது வலிமையை கேரளத்தில் இழந்து வருவதையே இது காட்டுகிறது” என்று அவர் விமர்சித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இந்த மண்டியிடுதல் உட்பூசலைக் கிளப்பி இருக்கிறது. முஸ்லிம் லீகுக்கு ஐந்தாவது அமைச்சர் பதவி அளிக்க எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய அமைச்சர் ஆர்யாதான் முகமது பதவி ஏற்பு விழாவைப் புறக்கணித்தார். ”காங்கிரஸ் முஸ்லிம் லீகிடம் மண்டியிட்டுவிட்டது தவறு” என்கிறார் இவர். கேரள மாநில முன்னால காங்கிரஸ் தலைவர் முரளிதரனும் தலைமையை கண்டித்திருக்கிறார். ஆனால், சாண்டியோ, எல்லாம் தில்லி தலைமையிடம் கேட்டுத் தான் செய்தேன்  என்கிறார்.
முந்தைய அச்சுதானந்தன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசில் இத்தகைய மோசமான போக்கு இல்லை. அப்போது 3 முஸ்லிம் அமைச்சர்களும், 2 கிறிஸ்தவ அமைச்சர்களும், 15 ஹிந்து அமைச்சர்களும் இருந்தனர். மத நம்பிக்கை அற்ற கட்சி என்று கூறிக் கொண்டபோதும், சிறுபான்மையினர் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்த மார்க்சிஸ்ட்கள் விடவில்லை. அத்தகைய நிலைமை அவர்களுக்கு தேர்தல் முடிவுகளிலும் ஏற்படவில்லை.
ஆனால், இன்றைய நிலைமை மிகவும் மோசம். தேர்தல் களத்தில் வெல்பவர்களே மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள். மொத்தமுள்ள 56.2 சதவீத ஹிந்துக்களில் பலரும் ஜாதி, கட்சி பார்த்து வாக்குகளை சிதறடித்துவிடும் நிலையில், பலர் (குறிப்பாக மேட்டுக்குடியினர்) வாக்குச்சாவடிப் பக்கமே வராத நிலையில், சிறுபான்மையினர் திரண்டுவந்து வாக்களித்து தங்கள் சக்தியை நிரூபித்து விடுகிறார்கள். பிறகு புலம்புவதில் என்ன பயன் இருக்கிறது?
கேரள அமைச்சரவையில் சிறுபான்மையினர் ஆதிக்கம்
கிறிஸ்தவர்கள்: 6 பேர்
1. முதலமைச்சர் ஓமன் சாண்டி
2. கே.ஜோசப் (இருவரும் காங்கிரஸ்)
3. கே.கே.மானி
4. பி.ஜே.ஜோசப் (இருவரும் கேரள காங்கிரஸ் – மானி பிரிவு)
5. அனுப் ஜேக்கப் (கேரள காங்கிரஸ் -ஜேக்கப் பிரிவு)
6. ஷிபு பேபி ஜான் (ஆர்.எஸ்.பி -பி பிரிவு)
இஸ்லாமியர்கள்: 6 பேர்
1. ஆர்யாதான் முகமது (காங்கிரஸ்)
2. பி.கே. குன்னாலி குட்டி
3. பி.கே.அப்து ரப்
4. வி.கே.இப்ராஹீம் குஞ்சு
5. எம்.கே.முனீர்
6. மஞ்சாலம் குழி அலி (ஐவரும் முஸ்லிம் லீக்)
மக்கள் தொகையுடன் ஒப்பீடு:
மொத்த அமைச்சர்கள்: 22 பேர்.
சிறுபான்மையினர்: 12 பேர்.
பெரும்பான்மையினர்: 10 பேர்.
மக்கள்தொகையில் சிறுபான்மையினர் விகிதம்: 44
அமைச்சரவையில் சிறுபான்மையினர் விகிதம்: 54
மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் விகிதம்: 56
அமைச்சரவையில் பெரும்பான்மையினர் விகிதம்: 46
இப்போதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் நாயர் சேவை சங்கத்துக்கு (என்.எஸ்.எஸ்) தெரிந்திருக்கிறது. ”பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு போய்விட வேண்டுமா?” என்று, அமைச்சரவை மாற்றத்தால் கொந்தளித்த என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கேட்டிருக்கிறார். காலம் கடந்த பின்னர் ஞானோதயம். கேரளாவில் தற்போது நிலவும் அரசியல் நிலைமை நீடித்தால், கேரளாவில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக பிற மாநிலங்களுக்கு (காஷ்மீர் ஹிந்துக்கள் போல) படையெடுக்க வேண்டிய நிலைமை வரலாம்.
கேரள அரசியலில் அடுத்த முக்கியமான சக்தியான ஈழவர்கள் சார்ந்த ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி) அமைப்பும் சாண்டியின் விபரீத முடிவை எதிர்த்திருக்கிறது. அதன் பொதுச்செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசன், ”ஜனநாயகம் என்ற பெயரில் கேரளாவில் ஓமன் சாண்டி தலைமையில் மதவாதிகளின் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் குறித்து வெட்கப்படுவதை தவிர வேறு வழியில்லை” என்று மனம் புழுங்கி இருக்கிறார்.
இவ்விரு அமைப்புகளும் தான் காலம் காலமாக காங்கிரஸ் கட்சியை கேரளாவில் நிலைநிறுத்தி வந்துள்ளன. சமீபத்திய மாற்றங்களால் இந்த அமைப்புகள் அதிருப்தி அடைந்திருக்கின்றன. இந்த அதிருப்தி, நெய்யாட்டிங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.
அதைவிட முக்கியமானது, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, மதவாதிகளுக்கு மண்டியிடும் காங்கிரஸ் கட்சியின் போக்கை வெளிப்படுத்த இந்நிகழ்வு உதவி இருப்பதுதான். சுதந்திரத்துக்கு முன் முஸ்லிம் லீகிடம் மண்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் தான் தேசப்பிரிவினை நிகழ்ந்தது. மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா? நாட்டு மக்கள் முன்னுள்ள கேள்வி இது. 

மஹாபாரத உரையாடல்கள் – 001 கற்றலும் சாதியும்

வியாச பாரதம், வில்லி பாரதம், பாஞ்சாலி சபதம் போன்ற மஹாபாரதத் தலைப்புகளில் நண்பர்கள் அவ்வப்போது தனிமடல்களிலும், சிற்சில குழுக்களிலும் ஐயங்கள் எழுப்பி வருகிறார்கள். அவற்றுக்கு நான் அளித்துவரும் விடைகளை ஒரு பொதுத் தளத்தில் இட்டு வைப்பது நல்லது என்று பலரும் அபிப்பிராயப்பட்ட காரணத்தால், தமிழ்இந்து தளமே அதற்குப் பொருத்தமான தளம் என்று கருதி இங்கே அந்த விவாதங்களை இடத் தொடங்குகிறேன். பாரதத்தில் பல்வேறுபட்ட தலைப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன. கேள்விகளையும் விடைகளையும் வரிசையாக இடுவதாக உத்தேசித்திருக்கிறேன். ஐயங்களை எழுப்பிய நண்பர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய ஐயங்களையும், என் விளக்கங்களையும் இந்தப் பக்கங்களில் பதிகிறேன். தன் பெயரை இடவேண்டாம் என்று கேட்டுக் கொண்ட நண்பர்களுடைய பெயர்கள் உடுக்குறிகளால் (*******) காட்டப்படும். மற்றவர்களுடைய பெயர்கள் இடம்பெறுகின்றன.
வாசகர்கள் பங்குபெற விரும்பினால், வாசகர்களுக்கு ஐயங்கள் இருந்தால் அவையும் வரவேற்கப்படுகின்றன. கேள்விகளை editor@tamilhindu.com முகவரிக்கு அனுப்பலாம். தெரிந்தெடுத்த கேள்விகள்/ஐயங்களை விளக்கவும் விவாதிக்கவும் செய்யலாம். தளத்தின் நோக்கத்துக்கும் கொள்கைக்கும் பொருத்தமான கேள்விகளைத் தேரும் உரிமை ஆசிரியர் குழுவைச் சார்ந்தது.
முதல் இடுகை, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நண்பரின் கேள்வியோடு தொடங்குகிறது. இந்தப் பக்கங்களில் நான் மேற்கொள்ளப் போகும் நிலைப்பாட்டுக்கு விளக்கமாக இதைச் சேர்த்துக் கொள்கிறேன்.
****** எழுதியது:

இங்கே விவாதம் திசை திரும்புகிறது என்று நினைத்தாலும் நீங்கள் துரோணர் பற்றி எழுதியதால் இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் ஆசிரியர். ஆசிரியர் பணி என்பது பிராம்மண வர்ணத்தைச் சேர்ந்தது. ஆனால் கர்ணன் தொடையில் வண்டு துளைக்கும்போது அவன் க்ஷத்திரியன் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள் அல்லவா அப்போதே ஒருவனின் பிறப்பை வைத்து இவன் இப்படித்தான் செயல்படுவான் என்று நினைப்பது இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
அன்புள்ள ******,
இந்த விவாதங்களுக்குள் நுழைவதற்கு முன்னால் ஒரு சிறிய தன்னிலை விளக்கம் கொடுத்துவிடுகிறேன்:
1) நான் உள்ளதை உள்ளபடி மட்டும்தான் எழுதுவேன் ஆகவே, எழுதியது எல்லாமும் என் கருத்து என்று முத்திரையிட்டுவிட முடியாது. அங்கே என்ன இருக்கிறதோ அதைச் சொல்வேன். அத்தனையையும் நான் ஒப்புக்கொண்டேனா, இல்லையா என்ற முடிபுகளுக்கு இவை இடம் தாரா. ஒருவேளை அவ்வாறு யாரும் முடிவுகளுக்கு வந்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. எப்படி இருந்தாலும் அவை என்னைக் கட்டுப்படுத்தான் போவதில்லையே.
2) சில உண்மைகள் சிலருக்கு வருத்தத்தைத் தரலாம் ‘நான் அங்கே அவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறேன்’ போன்ற பலவிதமான எதிர்வாதங்கள் எழலாம் அவ்வாறு எழுந்தால், புதியனவாக ஏதும் கருத்துகள், உண்மைகள், தெளிவுகள் ஏற்படுமாயின் அவற்றைக் கற்றுக்கொள்ள நானும் முயல்வேன் ஆனால், தேவையற்ற விவாதம் என்று எனக்குத் தோன்றுவனவற்றுக்கு நான் விடை சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன் அவ்வாறு நான் விடுத்து, அவசியமாக நான் விடையளித்தே ஆகவேண்டும் என்று நண்பர்கள் கருதுபவனவற்றச் சுட்டிக் காட்டினால் என்னால் இயன்றவரை விடையளிக்க முயல்வேன்.
3) இப்படி, பலவிதமான பதிப்புகள் இருந்து, பலர் பலவிதமாக அபிப்பிராயப்பட இடங்கொடுக்கும்படியான ஆய்வுகளும், முடிபுகளும் நிறையவே இருக்கின்றன. ஆனால், நான் பேசுவது மூலநூல்களான வியாச பாரதம் (நெருக்கமான மொழிபெயர்ப்பாகக் கருதப்படும் கிஸாரி மோகன் கங்கூலியின் பதிப்பு, மற்றும் சமஸ்கிருதப் பதிப்பு), வில்லி பாரதம் போன்றவற்றின் அடிப்படையில் பேசப்படுபவை, என்னிடம் உள்ள பதிப்புகள் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை, எனவே, நான் இங்கே சொல்வன எல்லாமும் என்னிடமுள்ள பதிப்புகளின் அடிப்படையில் மட்டுமே என்பதை முதலில் தெளிவாக்கி விடுகிறேன். இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு There are as many Ramayans as there are scripts என்பது இராமாயண ஆய்வாளரான வின்டர்நீட்ஸ் சொல்வது. எத்தனை ஓலைச் சுவடிகள் உள்ளனவோ அத்தனை இராமாயணங்கள் உள்ளன என்பதும் உண்மையே ஒவ்வொரு பிரதியிலும் சின்னச் சின்ன மாறுதல்கள் தெரியும். அவற்றையெல்லாம் ஒரு நிலைப்படுத்தி ஒரு standard recension கொண்டுவந்துவிட்டனர் என்னிடம் உள்ள recensions அப்படிப்பட்டவையே ஆகவே நான் இந்தப் பதிப்புகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்ற நம்புகிறேன்.
4) வர்ணம் முதலியனவற்றில் எனக்கு ஈடுபாடு கிடையாது நான் அந்த நோக்கில் இவற்றைப் பயின்றதும் இல்லை இருந்தபோதிலும், ‘எதிரியே வந்து கேட்டாலும் அவன் வெல்வதற்கு முகூர்த்தம் குறித்துக் கொடுப்பது என் கடமை’ என்று சொன்ன சகாதேவனைப் போல், என் கருத்துக்கு இடம் கொடாமல் உள்ள உண்மைகளை உள்ளவாற எடுத்து வைக்கிறேன் இந்த உவமை முற்றிலும் பொருத்தமான ஒன்றன்று இங்கே என்னைக் கேட்பவர்கள் என் எதிரிகளுமல்லர்; அவர்கள் வெல்வதற்கு நான் வழி சொல்லவும் இல்லை ஆயினும் நடுவுநிலைமை என்ற மனப்பாங்குக்கு உதாரணமாக மட்டுமே இதைச் சொன்னேன். மேலே சொல்லியிருப்பவை என் நிலைப்பாட்டைத் தெளிவாக்கும் என்ற நம்புகிறேன் வாதப் பிரதிவாதங்களைக் காட்டிலும் ஐய வினாக்களுக்க விடையளிப்பது மட்டுமே என் பணி என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன் Treat me as a resource person and not as a rival to compete with ‘பிறரைக் காட்டிலும் நான் மேம்பட்டவன்’ என்ற நிறுவவேண்டிய அவசியம் எனக்கில்லை அவ்வாறு நான் கருதவுமில்லை. ****** அவர்கள் மேற்படிப் பத்தியில் சொல்லியிருக்கும் விவரங்களில் அடிப்படை உண்மை இருந்தாலும், அவற்றின் கான்டெக்ஸ்டிலிருந்து சற்றே விலகுகின்றன. கான்டெக்ஸ்ட் இல்லாமல் எதையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது என்பத என்னுடைய உறுதியான நம்பிக்கை இவற்றையும் விளக்க அடுத்த மடலிலிருந்த முற்படுகிறேன்.
(இங்கிருந்து விவாதங்கள் தொடர்கின்றன)
முதலில் இந்த மடல் சொல்கின்ற சில செய்திகளை எடுத்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பத்தியாகத் தனித்தனியே பேசுகிறேன்.
வில்வித்தை அல்லது தனுர் வேதம் என்றழைக்கப்படும் துறையிலும் அந்தணர்களுக்குப் பயிற்சி இருந்திருக்கிறது (தேவையான இடங்களில், ‘அந்தணர்களில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு’ என்று பொருள் கொள்ளவும்.) க்ஷத்திரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கத்துடனேயே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்று கருத இடமுண்டு அவ்வாறே ‘தெய்வத்தின் குரல்’ தொகுதிகளிலும் பெரியவர் சொல்கிறார்.
துரோணருடைய தந்தையான பரத்வாஜரும், கிருபருடைய தந்தையான சரத்வானும் இந்தப் பயிற்சிகளில் சிறந்து விளங்கினவர்கள் என்பதற்கான குறிப்புகள் மஹாபாரதத்தில் உள்ளன. துரோணரும் கிருபரும் வில்வித்தை பயின்றதும், பயிற்றுவிப்பதற்கான நோக்கத்துக்காகவே என்பதும் தெளிவு, துரோணர் தன் தந்தையிடம் பயின்றார் கிருபரையும் அவருடைய சகோதரியான கிருபியையும் சந்தனு காட்டில் கண்டெடுத்துத் தன் அரண்மனையில் வளர்த்து வருகையில் கிருபருக்கும் தனுர் வேதப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தனுர் வேதம் என்பது வில்லையே பொதுவாகக் குறித்தாலும், வில், வாள் என்பன ஆயுதங்களுக்கு உரிய பொதுப் பெயர்கள் ஆகவே, தனுர் வேதம் என்றால் வில்வித்தை என்பது மட்டுமில்லை; வாள், வேல், கதை இன்ன பிற ஆயுதங்களையும் சேர்த்துப் பொதுவாக ஆயுதப் பயிற்சி என்பதையே குறிக்கிறது.
ஆனால் துரோணர் பின்னர் அரசரானார் பாஞ்சால மன்னனுடன் அவருக்கிருந்த வேறுபாடுகளை அடிப்படையாக வைத்து, தன் மாணவர்களை அவனோடு பொரச் செய்து, பாஞ்சால நாட்டை வென்று, அதில் ஒரு பாதியைத் தான் எடுத்துக் கொண்டு, மற்றதைப் பாஞ்சால மன்னனுக்கே தந்து, ‘இப்போது நீயும் நானும் சமம்’ என்ற தம் வேறுபாடுகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார் துரோணர் ஆனால் வேறுபாடுகள் அத்துடன் முடிந்துவிடவில்லை க்ஷத்திரிய கோபம் அவ்வளவ சீக்கிரத்தில் ஆறாது என்பதும் மஹாபாரதம் சொல்லும் செய்திகளில் ஒன்று. அதனால்தான் பாஞ்சாலன், துரோணரைக் கொல்வதற்காக யாகம் செய்த திருஷ்டத்யும்னனைத் தோற்றுவித்தான் அதற்குள் இப்போது நுழைய வேண்டாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
கர்ணனை சூத புத்திரன் என்று அழைத்திருப்பது உண்மையே ஆனால், சூதன் என்ற சொல்லுக்கு ‘சூத்திரன்’ என்ற பொருள் இல்லை இந்திரா பார்த்தசாரதி போன்ற பெரியவர்கள் அப்படி எழுதியிருந்தாலும், அந்தச் சொல்லுக்கு அப்படி ஒர பொருள் அகராதிகளில் கிடைக்கவில்லை ‘பாணன்’ என்ற ஒரு பொருள் இந்தச் சொல்லுக்கு உண்டு மஹா பாரதக் கதையைச் சொல்பவரே (வியாசரிடமிருந்த கற்றுக் கொண்டு ஜனமேஜய ராஜாவின் சத்ர யாகத்தின் போது வந்திருந்த) ரோமஹர்ஷணர் என்ற சூதர்தான் அவரை அந்தணர்கள் வரவேற்று உபசரித்து, அர்க்கியங்கள் கொடுத்து, கதையை அவர் வாயிலாகக் கேட்கத் தொடங்குகின்றனர். பிறகு வைசம்பாயனர் கதை சொல்லச் சேர்ந்துகொள்கிறார்.
சூதன் என்ற சொல்லுக்குத் தேரோட்டி என்ற பொருள் உண்டு தேரோட்டி, சூத்திரன் இல்லை. இதைப் பற்றிய முக்கியமான மஹாபாரதக் குறிப்பு ஒன்றை (கர்ணன் வாய்மொழியாகவே வரும் பொருள் வரையறையைப்) பின்னால் பார்க்கலாம். பின்னால், விராட பர்வத்தில் கீசகனைப் பல சமயங்களில், பல இடங்களில் பாஞ்சாலி ‘சூத புத்ர’ என்றே அழைப்பதைப் பார்க்கலாம்.
தேரோட்டி மகன் என்ற எள்ளலுக்குப் பலமுறை–குறிப்பாக பீமனால்–கர்ணன் ஆளாகியிருக்கிறான். பாஞ்சாலி, சுயம்வரத்தின்போது, ‘நான் சூதனை வரிக்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறாள். ஆனால், கர்ணனை துரியோதனன் உள்ளிட்ட ஏனையோரும், மிகக் அன்புடனும் மரியாதையுடனும் ‘சூத புத்ரா!’ என்று அழைப்பதைப் பார்க்கலாம். இதற்கான வியாச பாரத ஆதாரங்களைப் பின்னர் இடுகிறேன். ஆகவே, ‘சூத புத்திரன்’ எனப்படும் விளி வெறும் எள்ளல் குறிப்பு மட்டுமே அன்று. பீமன் மட்டுமே, அல்லது பாண்டவர்கள் மட்டுமே, அல்லது கர்ணனுக்கு எதிரானவர்கள் மட்டுமே இவ்வாறு அழைத்திருந்தால் அதை அவ்வாறு கொள்ள இயலும். துரியோதனன், திருதிராஷ்டிரன் உள்ளிட்ட, கர்ணனிடம் பேரளவில் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்களும் அப்படி அழைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, இந்த விளியில் எள்ளல் இல்லை. இப்படிப் பொதுவாகவே அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வரமுடிகிறது.
ஆனால், வண்டு துளைத்ததை வைத்து அவன் க்ஷத்ரியனே என்று கண்டறிந்ததற்கும் இதற்கும் தொடர்பில்லை பரசுராமர் க்ஷத்ரியர்களை அழிப்பதை விரதமாக மேற்கொண்டிருந்தவர் ஆகவே க்ஷத்திரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் அவரிடத்தில் ‘நான் பிராமணன்’ என்று கர்ணன் பொய் சொன்னதன் காரணத்தால், ‘நீ பிராமணன் இல்லை; க்ஷத்ரியன்’ என்ற பரசுராமர், தான் அவ்வாறு முடிவுக்கு வந்ததன் காரணத்தைச் சொல்லிச் சபிக்கிறார்.
ஆனால், பரசுராமர் க்ஷத்ரியர்களில் ஒருவருக்கும் பயிற்சி அளிக்கவில்லையா என்று கேட்டால், ‘அது அப்படியில்லை, க்ஷத்ரியர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார்’ என்றுதான் விடை சொல்ல வேண்டியிருக்கும். பீஷ்மருடைய குரு யார்? பரசுராமர்தானே!அவர் க்ஷத்ரியர் இல்லையா! பிறகு ஏன் அவருக்குக் கற்பித்தார்! இதற்கு விடை காணப் புகுந்தால் திசை மாறும் எனவே இங்கே இதனை விட்டுவிடுகிறேன்.
கற்பிப்பதில் சாதி பார்த்தார் என்று துரோணர் மேல் ஒரு குற்றச்சாட்ட உண்டு கர்ணன் தொடக்க நாளில் துரோணரிடம் பயின்றவன்தான் துரியோதனனும் கர்ணனும் சேர்ந்துகொண்டு, பயிற்சி பெற்ற காலங்களில் பாண்டவர்களைச் சதா காலமும் சீண்டிக் கொண்டிருந்ததற்கான குறிப்புகள் நிறையவே இருக்கின்றன. இவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் தருகிறேன்.
சாதி என்ற திறக்கில் பார்த்தால், அடுத்ததாக ஏகலவ்யன் (ஏகலைவன் இல்லை; ஏகலவ்யன்) கதைக்குள் இட்டுச் செல்லும் ஏகலவ்யன் ஏதோ ஓர் ஏழை வேடன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு ஹிரண்யதனுஸ் என்ற நிஷாத ராஜனுடைய மகன் ஏகலவ்யன் நிஷாதன் என்பது வேடர் இனத்தைத்தான் குறிக்கும்; ஆயினும் ஏகலவ்யன் வேடர் குலத்து அரசனுடைய மகன் ‘அவன் பின்னால் என்ன ஆனான் என்பது தெரியவே இல்லை’ என்றெல்லாம் (பாலகுமாரன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள்) சொல்லியிருக்கிறார்கள் ஏகலவ்யன் பின்னாளில் அரசாண்டான்; தரும புத்திரன் நடத்திய ராஜசூய யாகத்துக்கு வந்திருந்தான்.
“பற்றலர் அஞ்சும் பெரும்புகழ் ஏகலவியனே – செம்பொன்
….. ….. …..பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும்”
என்று பாரதியின் பாஞ்சாலி சபதம் பேசுகிறது; ‘ஏகலவ்யனுக்கு ஏன் முதல் மரியாதை செய்யக் கூடாது?’ என்று சிசுபாலன் அர்க்யாஹரண பர்வத்தில் கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்வதைக் குறித்துக் கேட்கிறான் (“When the invincible Bhishmaka and king Pandya possessed of every auspicious mark, and that foremost of kings–Rukmi and Ekalavya and Salya, the king of the Madras, are here, how, O son of Pandu, hast thou offered the first worship unto Krishna? “),
ஏகலவ்யனுக்குப் பயிற்சி அளிக்காகதற்கு சாதி மட்டுமே காரணமாக இருந்திருக்கவில்லை தான் யாருக்காகப் பணியாற்றகிறோமோ அந்த மன்னனுக்க எதிரான சக்தியாக இவன் வளர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக துரோணர் கருதியதன் விளைவே அது பின்னால் யுத்தத்தில் துரியோதனுடைய பக்கத்தில் நின்ற போரிட்டவர்களில் ஏகலவ்யனும் ஒருவன் என்பதையும் கவனிக்க வேண்டும்.
சாதி என்பதைக் காட்டிலும் அரசியல் என்பதே சரியான காரணமாக இந்தக் குறிப்பிட்ட விஷயத்துக்குப் பொருத்தமான ஒன்றாக இருக்க முடியும். சாதியைக் காரணம் காட்டி ஏகலவ்யனை துரோணர் விலக்கினார் என்றால், கர்ணனை ஏன் விலக்கவில்லை? அவனுக்கு ஏன் பயிற்சியளித்தார்? ஒன்று, கர்ணன் எதிரியாக மாறக்கூடிய வாய்ப்பு இருந்திருக்வில்லை என்பதாக இருக்க வேண்டும்; இல்லை, சாதிதான் காரணம் என்றால், கர்ணனுடைய ‘சூத புத்திர’ நிலைப்பாட்டில், ‘சூதன்’ என்பது விலக்கப்பட வேண்டிய, பயிற்சிக்க ஏற்புடையதாகாத இனத்தைச் சேர்ந்தவன் என்பது தவறாக இருக்க வேண்டும். இல்லையா? நான் இவற்றில் முன்னதான காரணத்தையே பெரிதும் ஏற்புடையதாகக் கருதுகிறேன்.
அப்படி ஏற்புடையதானால், ஏகலவ்யன் விஷயத்திலும் அரசியல் நிலைப்பாடே காரணமாக இருக்க முடியும் சிறிய, அல்லது குறுநில மன்னர்களை வளரவிடாமல் பார்த்துக் கொள்வதும் அரசனுடைய அவசியத் தேவைகளில் ஒன்றாக இருந்தது. இந்தக் காரணத்தால்தான், ‘நான் உன்னோடு வருகிறேன்’ என்று அனுமன் சொன்ன நேரத்தில், கார்காலப் படலத்தில் தனியே தங்கப் போன இராமன் அனுமனுக்குப் பின் வருமாறு சொல்கிறான்:
‘நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற
வரம்பு இலாததனை, மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால்,
அரும்புவ, நலனும் தீங்கும்; ஆதலின், ஐய! நின்போல்
பெரும் பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது அம்மா!
வாலி இப்போதுதான் வீழ்ந்து, சுக்ரீவன் அரசேற்றிருக்கும் இந்த நிலையில், ‘அரும்புவ நலனும் தீங்கும்’ நல்லதும் நடக்கும்; அல்லதும் நடக்கும் ஆகவே அவற்றை எதிர்கொள்ளத் தக்க துணைவனாக நீ இப்போது சுக்ரீவன் பக்கத்தில் இருப்பதே சரியானது’, அல்லதும் நடக்கும் என்றால் அதற்கு என்ன பொருள்? கம்பனே வேறொரு இடத்தில் விடை சொல்கிறான்:
உரை செய் திகிரிதனை உருட்டி, ஒரு கோல் ஓச்சி, உலகு ஆண்ட
அரைசன் ஒதுங்க, தலை எடுத்த குறும்பு போன்றது, அரக்கு ஆம்பல்.
(பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம், பாடல் 75)
பேரரசன் ஒருவன் சற்றே அயர்ந்தானானால் ‘குறும்பு தலை எடுப்பதைப் போல’ ஆம்பல் மலர்ந்தது குறும்பு என்றால், குறுநில மன்னன், சிற்றரசன், chieftain என்பது பொருள்.
****** அவர்களுடைய மடலின் மற்ற பத்திகளுக்குச் சற்றுப் பொறுத்து வருகிறேன்.
(விவாதப் பதிவுகள் தொடரும்)

ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்

பா.ஜ.க – தற்போதைய நிலைமை
2004-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலை விட 2009-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க அடைந்த தோல்வி கடுமையானது. இந்தத் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணம், 2004-ம் ஆண்டு பெற்ற தோல்விக்கான காரணங்களை பா.ஜ.க சரியாக அலசவில்லை என்று சொல்லலாம். மாநிலம் வாரியாக, தொகுதி வாரியாக, என்ன பிரச்சனைகள் என்பதையும் கவனிக்கத் தவறிவிட்டது. 1999 தேர்தலில் மக்கள் தங்களுக்கு எதற்காக ஆதரவு அளித்தனர், அவர்கள் முன்னிலையில் என்னென்ன வாக்குறுதிகள் அளித்தோம், அவர்களின் எதிர்பார்ர்ப்புகளுக்கிணங்க நாம் ஆட்சி செய்தோமா, நம்மால் நிறைவேற்றமுடியாத சில வாக்குறுதிகளுக்கு சரியான காரணங்களை மக்களிடத்தில் எடுத்துச் சென்றோமா, என்றெல்லாம் சிந்திக்கத் தவறிவிட்டது.
2004 முதல் 2009 வரை தாம் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் கட்சியை வளர்க்க எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க சரிவர எடுக்கவில்லை. அந்த ஐந்து வருட காலத்தில் நடந்த சட்ட சபைத் தேர்தல்களில், தங்களுக்கு அபரிமிதமான ஆதரவு உள்ள மாநிலங்களில் மட்டுமே (குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர்) மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அபரிமிதமான ஆதரவு இருந்தும் உட்கட்சிப் பிரச்சனைகளால் ஆட்சியைத் தக்க வைக்க முடியாமல் தோல்வி கண்ட மாநிலம் ராஜஸ்தான். மற்ற சில மாநிலங்களில் (ஹிமாசலப் பிரதேசம், பஞ்ஜாப்) பெற்ற வெற்றி, பா.ஜ.க ஆதரவு ஓரளவிற்கும், அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீதான வெறுப்பும், கோவமும் சேர்ந்ததாலும் ஏற்பட்ட வெற்றி என்று சொல்லலாம். உள்ளாட்சி தேர்தல்களில் பெருவாரியாக வெற்றி பெற்றும் சட்டசபை தேர்தலில் மாபெரும் தோல்வி பெற்ற மாநிலம் தில்லி. கட்சியை நன்றாக வளர்த்து, நல்ல முறையில் வெற்றி கண்ட மாநிலமாக கர்நாடகத்தை மட்டும் சொல்லலாம்.
2004 முதல் 2009 வரை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை. கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, பொருளாதாரம், விலைவாசி, உள்-வெளி பாதுகாப்பு, விவசாயம், உள்துறை, வெளியுறவு, என்று அனைத்துத் துறைகளிலும் மன்மோகன் அரசின் செயல்பாடுகளில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை. மன்மோகன் அரசு ஆட்சி செய்த லட்சணத்தையோ, அவ்வரசின் செயல்பாட்டினால் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டங்களையோ, ஒரு பிரதான எதிர்கட்சி தன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அருமையான முறையில் பயன்படுத்தியிருக்க முடியும், பயன்படுத்தியிருக்க வேண்டும். பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் மத்திய அரசை சரியானபடி எதிர்கொண்டு, அதன் யோக்கியதை மக்களுக்கு தெரியுமாறு முனைந்து செயல்பட்டிருக்க வேண்டும். இவ்விஷயத்தில் பா.ஜ.க. பரிதாபமாகத் தவறிவிட்டது. சுலபமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டிய பா.ஜ.க நல்ல வாய்ப்பை இழந்து நிற்கிறது. 2004 தோல்விக்குப் பிறகு, அத்தோல்வியின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் என்னெவெல்லாம் தவறுகள் செய்ததோ, அதை விட அதிகமான தவறுகளை இப்போது செய்து கொண்டிருக்கிறது.

பொதுவான கட்சி வகைகள்
நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல்வகை, குடும்ப வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள். இதில் காங்கிரஸ், தி.மு.க, சிவசேனை, ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், அகாலி தளம், தேசிய காங்கிரஸ், பா.ம.க போன்றவை சேரும். இரண்டாவதாக, தனி மனித சர்வாதிகார கட்சிகள். இதில் அ.இ.அ.தி.மு.க, பஹுஜன் சமாஜ், திரிணமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, போன்றவை சேரும். மூன்றாவதாக, உட்கட்சி ஜனநாயகத்துடன் செயல் படும் கட்சிகள். இதில் பா.ஜ.க, கம்யூனிசக் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. ஐக்கிய ஜனதா தளத்தை ஓரளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம்.
குடும்ப வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளைப் பொறுத்தவரை, வெற்றிகளின் பாராட்டுதல்கள் அக்குடும்பத்திற்கும், தோல்விகளின் பழிகள் கட்சிக்கும் (மற்ற தலைவர்களுக்கும்) சென்று விடும். குடும்பத்தின் காலடியில் விழுந்து கிடந்து அக்குடும்பத்தைத் துதி பாடும் தலைவர்களும் தொண்டர்களும் இருக்கும் வரை, அக்கட்சிகளுக்கு தோல்விக்குப் பின்னர் பெரிதாக உட்கட்சிப் பிரச்சனைகள் வருவதில்லை. தனி மனித சர்வாதிகாரக் கட்சிகளும் அதே போல் தான். வெற்றியின் பாராட்டுக்கள் அந்த சர்வாதிகாரத் தலைவருக்கும், தோல்வியின் பழிகள் மற்ற தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் தான். இங்கும் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் தங்கள் சர்வாதிகாரத் தலைவரின் காலடியில் கிடந்து அவர் புகழ் பாடிக் கொண்டிருப்பதால் தோல்வியினால் பிரச்சனைகள் ஏற்படாது. ஆனால், மூன்றாவது வகையாகச் சொல்லப்பட்ட, ஒரளவிற்கு உட்கட்சி ஜனநாயகம் இருக்கக் கூடிய பா.ஜ.க போன்ற கட்சிகளில், வெற்றி பெற்றால் பிரச்சனை கிடையாது. அனைவரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடிவிட்டுப் போகலாம். தோல்வியுற்றாலோ, ஒரே குழப்பம் தான். பழியையும் கூட்டாக எல்லோரும் ஏற்றுக் கொண்டால் பிரச்சனையில்லை. ஆனால் பழியை யார் தலை மேல் போடுவது என்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தால், கட்சியின் கட்டுப்பாடு போய், ஆங்காங்கே பிளவு ஏற்பட ஏதுவாகிறது. தற்போது பா.ஜ.க-வின் நிலை இது தான்.
தி.மு.க, காங்கிரஸ், போன்ற குடும்ப வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளாகட்டும், அ.இ.அ.தி.மு.க, பஹுஜன் சமாஜ் போன்ற தனி மனித சர்வாதிகாரிகளின் கட்சிகளாகட்டும், தோல்விக்குப் பிறகு நல்லமுறையில் சமாளித்து தலை நிமிர்ந்து நின்றதையும், நிற்பதையும் பார்க்கிறோம். அதற்கு முக்கிய காரணம், அந்தக் குடும்பங்களும், தலைவர்களும், தங்கள் கீழ் உள்ள மற்ற தலைவர்களையும், தொண்டர்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார்கள். எனவே அவர்கள் மீண்டும் தலை நிமிர்வது ஓரளவிற்கு சாத்தியமானது. ஆனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத் தேர்தலில் தோற்ற பிறகு பா.ஜ.க. நிலைகுலைந்து போனது மிகவும் வருந்தத்தக்கது. இது நம் நாட்டின் ஜனநாயகத்திற்கும், முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல.

பா.ஜ.க – தலைவர்களின் இயலாமை, கட்சியின் சறுக்கல்
2009 பொதுத் தேர்தல் நிறைவுற்று 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்து, பாராளுமன்றம் ஒரு முறை கூடியும் முடிந்து விட்டது. இன்னும் பா.ஜ.க தோல்வியின் பாதிப்பிலிருந்து வெளிவந்தபாடில்லை. தன்னை வித்தியாசமான கட்சி என்றும், கட்டுப்பாடுள்ள, உட்கட்சி ஜனநாயகம் உள்ள கட்சியென்றும் கூறிக் கொள்ளும் ஒரு கட்சி, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் உடனே இறங்கியிருக்க வேண்டும். தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, சிறந்த பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயலாற்ற என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில் எப்படி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று விவாதித்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒரு செயல் திட்டத்தைத் தயார் செய்திருக்கவேண்டும். தேர்தல் முடிந்து 100 நாட்கள் ஆகியும் அவ்வாறு செய்யாமல் இருப்பது பா.ஜ.க போன்று திறமையான தலைவர்கள் உள்ள கட்சிக்கு அழகல்ல.
பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள். பல தேர்தல் களங்களைச் சந்தித்தவர்கள். அவர்கள் இவ்வாறு நிலைகுலைந்து போய் கோஷ்டிச் சண்டையிட்டுக் கொள்வது தான் வருத்தமளிக்கிறது. தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயாமல், அருண் ஜெய்ட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோருக்கு ராஜ்ய சபையிலும், லோக் சபையிலும் தலைவர் பதவிகள் தரப் பட்டது, ஜஸ்வந்த் சிங், யெஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்றோருக்குப் பிடிக்கவில்லை. உத்தர்கண்ட் மாநிலத்தின் முதல்வரான கந்தூரி அவர்களை அம்மாநிலத்தில் பொதுத் தேர்தல் தோல்விக்குக் காரணமாக்கி அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கியதும், ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்விக்கு அம்மாநில முதல்வராக இருந்த வசுந்தராவை தற்போது சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து கீழே இறக்காததும் பிரச்சனையாகிப்போனது. இதிலே மற்றொரு பிரச்சனை என்னவென்றால், வசுந்தரா அத்வானிக்கு வேண்டப்பட்டவர் என்றும் சொல்லப் படுவதால், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களின் கட்டளைகளை அவர் மதிப்பதில்லை என்றும் சொல்லப் படுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில், அத்வானிக்கும் ராஜ்நாத்திற்கும் பனிப்போர் என்றும் வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன.

பிரச்சனையாக மாறிய ஜஸ்வந்த் சிங் விவகாரம்
இதனிடையே, ஜஸ்வந்த், யெஷ்வந்த் மற்றும் அருண் ஷௌரி ஆகியோர் கட்சித் தலமைக்கு எழுதிய கடிதங்களுக்கு தலைமை சரியான மதிப்பளிக்கவில்லை. அவர்களை அழைத்து குறைகளைக் கேட்கவும் இல்லை. அவமானமுற்ற அவர்கள் ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் ஆற்றாமையை வெளியிடத் தொடங்கினார்கள். இது மக்களிடையே கட்சியின் பெயருக்குப் பாதகமாக அமைந்தது. யெஷ்வந்த் சின்ஹா கட்சிப் பதவிகளிலிருந்து வெளியேறினார். ஜஸ்வந்த் சிங், சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் பிரிவினைக்குக் காரணமாயிருந்த பாகிஸ்தானின் முதல் அதிபர் முகம்மது அலி ஜின்னாவைப் பற்றிய ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதை வெளியிட்டால் தேர்தல் நேரத்தில் கட்சியின் வெற்றிக்குப் பாதகமாக அமையும் என்கிற சந்தேகத்தின் பேரில், கட்சித் தலைமை, ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலின் போதும், பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போதும், புத்தகத்தை வெளியிடவேண்டாம் என்று கூறிவிட்டது. தேர்தல் முடிந்தபடியால் தற்போது புத்தகத்தின் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்தார் ஜஸ்வந்த் சிங்.
விழாவிற்கு ஓரிரு தினங்கள் முன்பே, அவர் புத்தகத்தில் இந்தியாவின் பிரிவினைக்கு சர்தார் வல்லபாய் படேலும், ஜவஹர்லால் நேருவும் தான் காரணம் என்றும், ஜின்னாவை மிகவும் பாராட்டியும் எழுதியிருந்தது, ஊடகங்களில் வெளியானது. இதனால் கோபத்திற்கும் அதிருப்திக்கும் ஆளான பா.ஜ.கவினர் யாரும் புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போகாமல் அதனைப் புறக்கணித்தனர். இதனிடையே, பா.ஜ.கவின் “சிந்தனைக் கூட்டம்” சிம்லாவில் நடைபெற ஏற்பாடு நடந்தது. அக்கூட்டத்திற்கு யெஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோருக்கு அழைப்பு இல்லை. ஜஸ்வந்த்திற்கு மட்டும் இருந்தது. அவரும் சிம்லா சென்றடைந்தார். அவரின் புத்தக வெளியீட்டினால் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியிருந்த பா.ஜ.க தலைமை, சிந்தனைக் கூட்டம் நடக்கவிருந்த அன்று காலை ஒரு அவசரக் கூட்டம் நடத்தி, ஜஸ்வந்த் சிங்கை கட்சியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்து, அம்முடிவை அவர் தங்கியிருந்த அறைக்குத் தொலைபேசி மூலம் அழைத்து அவரிடம் தெரிவித்தது.
கட்சி தொடங்கிய காலத்திலிருந்து முப்பது வருடங்களுக்கும் மேலாக கட்சிப்பணியாற்றியவர், 1998 முதல் 2004 வரை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் பொருளாதார, வெளியுறவு போன்ற துறைகளின் அமைச்சராக இருந்தவர், கட்சியிலும் பல பொறுப்புகள் வகித்தவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர், ஆகிய சிறப்புகள் பெற்ற ஒரு மூத்த தலைவரை, மரியாதை நிமித்தமாகக் கூட ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்யாமல், அவரின் தரப்பு நியாயங்களைக்கூட கேட்காமல், சிந்தனைக் கூட்டத்திற்கு வந்தவரை, சற்றும் எதிர்பாராமல், தொலை பேசி மூலம் கட்சியிலிருந்து வெளியேற்றம் செய்தது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தந்தனென்னவோ உண்மை தான். கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக, கட்சியினர் தங்கள் ஆதர்ச தலைவராகப் போற்றும் சர்தார் வல்லபாய் படேலைப் பற்றி அவருக்குக் கெட்ட பெயர் ஏற்படும் வகையில் எழுதியது மாபெரும் தவறு தான். ஆனால் இத்தனை ஆண்டுகள் கட்சியில் உழைத்த ஒரு மூத்த தலைவரான அவரை நீக்கம் செய்த முறை கட்சியிலேயே பலருக்கு அதிருப்தி தருவதாக இருந்துள்ளது. எனினும் ஜஸ்வந்தை நீக்கம் செய்ததன் மூலம் மற்ற அதிருப்தியாளர்களுக்கு, கட்சிக் கொள்கைக்கு மாறாக கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்பவர்களுக்கு இந்த கதி தான் ஏற்படும், என்கிற ஒரு பலமான தகவலை கட்சித் தலைமை அனுப்பியது. இதன் மூலம், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு வசுந்தராவைக் கட்சித் தலைமை வற்புறுத்த ஆரம்பித்தது.
ஜஸ்வந்தின் ஜின்னா விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற, அப்போதைய துணைப் பிரதமாரகவும் உள்துறை மந்திரியாகவும் இருந்த அத்வானி அவர்கள், அங்கே பாகிஸ்தான் மக்களிடையே ஜின்னாவை ”மதச்சார்பற்றவர்” என்று அவருடைய பழைய மாநாட்டுப் பேச்சு ஒன்றை குறிப்பிட்டு, பாராட்டிப் பேசினார். அதன் பிறகு அவருக்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம் தெரிவித்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறங்கவேண்டி வந்தது. ஜஸ்வந்த், அத்வானி இருவரும் ஜின்னாவைப் பாராட்டிப் பேசிய பேச்சுகளில் பெருமளவு வேறுபாடுகள் இருந்தாலும், அத்வானிக்கு ஒரு சட்டம் ஜஸ்வந்துக்கு ஒரு சட்டமா என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஜஸ்வந்த்தை கட்சியை விட்டு நீக்கிய விதம் மிகவும் அநாகரீகமாக இருந்தது என்றாலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் நடந்து கொள்ளும் விதமும், ஏதோ முப்பது ஆண்டுகள் பா.ஜ.க வின் எதிர்க்கட்சியில் இருந்து செயல்பட்டது போலவும் அவர் பேசுகின்ற பேச்சுக்களும், அவர் தன் புத்தகம் பாகிஸ்தானில் பிரமாதமாக வியாபாரம் ஆகவேண்டும் என்கிற நோக்கத்தோடு அங்கு சென்று அந்நாட்டு ஊடகங்களில் நம் தேசத் தலைவர்களை விமரிசனம் செய்ததும், அவர் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச பரிதாபமும் போய், அவரை கட்சியிலிருந்து நீக்கியது சரிதான் என்கிற முடிவிற்கு நம்மை வரவழைத்து விட்டன.
ஜஸ்வந்த் நடவடிகையின் விளைவுகள்
ஜஸ்வந்த் சிங்கின் மீது தலைமை எடுத்த நடவடிக்கை மூலம், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு வசுந்தராவைக் கட்சித் தலைமை வற்புறுத்த ஆரம்பித்தது.
இந்நடவடிக்கையினால் யெஷ்வந்த் சின்ஹா போன்றவர்கள் சற்று பின்வாங்கினாலும், வசுந்தரா இப்படியும் அப்படியுமாக ஆட்டம் காண்பித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு தலைவரான அருண் ஷோரி சற்றும் தயங்காமல் தன்னுடைய அதிருப்தியையும், நிலைப்பாடையும், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெளிவாகக் கூறினார். கட்சித் தலைமையையும் சற்று காட்டமாக விமரிசனம் செய்தார். கூடவே மிகவும் உஷாராக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைக் கவரும் வகையில், அதைப் பாராட்டும் வகையில், பா.ஜ.க-வை ஆர்.எஸ்.எஸ். கையகப்படுத்த வேண்டும் என்றும், அவ்வியக்கத்தின் தலைமையின் கீழ் தான் பா.ஜ.க செயல் படவேண்டும் என்றும் அந்தப் பேட்டியில் சொல்லி வைத்தார். பா.ஜ.க மீதான ஆர்.எஸ்.எஸ்ஸின் பிடிப்பு வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளுக்குள் அதுவே உண்மையாதலால், ஜஸ்வந்த் சிங்கின் மேல் அதிரடியாக நடவடிக்கை எடுத்த பா.ஜ.க தலைமையினால் அருண் ஷோரியின் மேல் எடுக்க இயலவில்லை. மேலும் உத்தர்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து இறக்கப்பட்ட கந்தூரி அவர்களும், மற்றவர்கள் கட்சியின் தோல்விக்காகத் தண்டிக்கப் படாதபோது தான் மட்டும் ஏன் தண்டிக்கப் படவேண்டும், என கேட்டு கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவரின் சென்னை வருகை
bhagavatஜஸ்வந்த் சிங், யெஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோர் அதிருப்தியாளர்களாக மாறியிருந்த சமயத்தில், சென்னைக்கு முதல் பயணமாக வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பா.ஜ.க பற்றி கேட்கப்பட்ட சரமாரியான கேள்விகளுக்கு நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார். “ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் பலர் பா.ஜ.க வில் இருந்தாலும் அது தனியான சுதந்திரமான கட்சி, அதன் பிரச்சனைகளை அதுவே தீர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி படைத்தது. தற்போது அக்கட்சிக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் பூசல்கள் மனதுக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், அவற்றிலிருந்து விரைவில் மீண்டு வரும். ஆர்.எஸ்.எஸ். என்பது சமூக மற்றும் கலாசார இயக்கமேயன்றி, அரசியல் இயக்கம் அல்ல. எங்களுக்கு அரசியல் செய்யவும் விருப்பமில்லை. பா.ஜ.க விற்கு நாங்களாக எந்த அறிவுரையும், ஆலோசனையும் வழங்கமாட்டோம். அவர்களாக எங்களிடம் வந்து அறிவுரையோ ஆலோசனையோ கேட்டால் வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்று மிகத் தெளிவாகத் தெரிவித்தார் மோகன்ஜி.
பத்திரிகையாளர் கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு மாபெரும் பொதுக் கூட்டமும் திருவான்மியூரில் நடந்தேறியது. ஐய்யாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்வயம் சேவகர்களும், அதற்கு சமமான பொது மக்களுமாக மொத்தம் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட அந்த மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள், “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேசத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து சேவை செய்து கொண்டு வருகின்றது. இந்த இயக்கத்தின் ஸ்வயம் சேவகர்கள் நல்ல முறையில் பண்படுத்தப் பட்டு, சுதந்திரமாக, சுயமாக, பல தளங்களில் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் விஞ்ஞானம் முன்னேறினாலும், கூடவே சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது; அதே போல் தான் ஒரு பக்கம் மதப் பற்றும் ஆன்மீகமும் வளர்ந்தாலும், சண்டை சச்சரவுகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. உடல், மனம், அறிவு ஆகியவற்றை அறிந்துகொணட உலகு, தர்மத்தை அறியத் தவறிவிட்டது. அந்த “தர்மம்” என்பது நம் தேசத்தில் தான் உள்ளது. மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் அந்த தர்மமே ஹிந்துத்துவம். உலக நாடுகளுக்கிடையே சகோதரத்துவத்தையும், சரிசமமான பாவனையையும், ஏற்படுத்த ஹிந்துத்துவம் உள்ள நம் நாட்டினால் மட்டுமே முடியும். அதைத்தான் உலகும் எதிர்பார்க்கிறது. தேவைக்கேற்ற திருப்தியுடன் கூடிய எளிமையான வாழ்வு எப்படி வாழவேண்டும் என்று நாம் தான் உலக நாடுகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்”.
”ஒரே மாதிரியான சமூகம் இருந்தால் தான் ஒற்றுமை ஏற்படும் என்று நம்பிக்கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு, பல்வேறு விதமான மக்கள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க முடியும் என்று நிரூபித்திருப்பவர்கள் நாம். நம்மிடையே உள்ள ஹிந்துத் தன்மையினால் தான் அந்த ஒற்றுமை சாத்தியமானது. நாம் எல்லா தனியடையாளங்களையும் அறிந்து மதிப்பு கொடுத்து, அனைத்தையும் ஒன்றுபடுத்தி, நமக்கென்று ஒரு பெரிய அடையாளத்தை ஏற்படுத்திவிட்டோம். ஹிந்துத் தன்மை என்ற உணர்வே அந்த அடையாளத்தை ஏற்படுத்த உதவியுள்ளது. நம் நாட்டிற்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. ஹிந்துத்தன்மையே அந்த பாரம்பரியம். இந்த ஹிந்துத் தன்மையை விட்டு, நம் பாரமபரியத்திலிருந்து விலகிப் போன ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காள தேசம், போன்ற நிலப் பரப்புகளெல்லாம் அமைதியை இழந்து கலவர பூமியாக இருக்கின்றன. சனாதன தர்மமே நம் தேசத்தின், சமூகத்தின் தாரக மந்திரம். தர்மம் நிலைத்துள்ள ஒரு சமூகத்தை அமைக்க தலைவர்களும், கோஷங்களும் போதாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு பாமரனும், நற்குணங்களும், எப்போதும் தயார் நிலயிலும், உள்ளவனாக ஆக வேண்டும்”.
“அந்தக் குறிக்கோளை முன்வைத்துதான் ஆர்.எஸ்.எஸ். இயங்கிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு அரசியல் தேவையில்லை. அதிகாரம் வேண்டி தினந்தினம் நடந்து கொண்டிருக்கும் மலிவான அரசியல் விளையாட்டுகளில் நாங்கள் பங்குபெற விரும்பவில்லை. ஜாதி, மத, மொழி வேறுபாடுகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அந்த வேறுபாடுகள் மறைய வேண்டும். ஹிந்துஸ்தானம், இந்தியா, பாரதம், என்பவை அனைத்தும் “ஹிந்து” என்பதையே குறிக்கின்றன. இது தான் நம் தேசத்தின் அடையாளம், ஹிந்து என்கிற அடையாளம், என்பதே மறுக்கமுடியாத உண்மை. இந்த ஹிந்து அடையாளமே நம்மை இந்த உலகத்தின் தலைசிறந்த நாடாக ஆக்கி தலைமைப் பீடத்தில் இருக்கச்செய்யப் போகிறது” என்று பேசி, நாட்டின் இளைஞர்களை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து, அதன் உள்ளே வந்து அதன் குணநலன்களை அனுபவித்து, அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, தேச சேவையில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தார்.
ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையும் பா.ஜ.க சிக்கல்களும்
சென்னைப் பயணத்தை முடித்துக் கொண்டு புது தில்லி திரும்பிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாக்வத் அவர்கள் “டைம்ஸ் நௌ” தொலைக்காட்சிக்கு ஒரு அருமையான பேட்டி அளித்தார். அதில், “பா.ஜ.க சுயமான சுதந்திரமான அமைப்பு. அதன் தினசரி காரியங்களில் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தலையிடாது. தற்போது பா.ஜ.கவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்திருக்கிறது கவலையை அளிக்கிறது. இருந்தாலும் இந்தப் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் சக்தியும், திறமையும அக்கட்சித் தலைவர்களிடம் உண்டு. சஙத்தைப் பொறுத்தவரை தலைவர் பதவிக்கு 55 முதல் 65 வயது வரை நிர்ணயம் செய்திருக்கிறோம். பா.ஜ.க அதன் தலைமையில் மாற்றம் கொண்டு வருமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களாக சங்கத்திடம் ஆலோசனையோ அறிவுரையோ கேட்டால் கண்டிப்பாக வழங்குவோம். சஙத்தைப் பொறுத்த வரை தலைமை ஏற்று நடத்துவதற்கு தேவைப்பட்ட நபர்கள் இருக்கின்றார்கள். நினைத்த மாத்திரத்தில் 75 தலைவர்கள் கூட சங்கத்தால் தேர்ந்தெடுக்க முடியும். சிம்லாவில் நடக்க இருக்கும் சிந்தனைக் கூட்டத்தில் பா.ஜ.க அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து ஒருமைப்பாட்டுடன், கட்டுப்பாட்டுடன், பழைய சக்தியுடன் மீண்டும் திரும்பும் என்று எதிர்பார்ர்க்கிறோம்” என்று கூறினார். பா.ஜ.கவிடம் சங்கம் என்ன எதிர்பார்ர்க்கிறது என்பதைத் தெளிவாகப் புரிய வைத்தார்.
ஆனாலும் பா.ஜ.க திரு மோகன்ஜி அவர்களின் எச்சரிக்கையை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவருடைய ஆலோசனைகளையும் எதிர்பார்ப்புகளையும் புறக்கணித்தது என்றே சொல்லவேண்டும். அவர் தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னதை தீவிரத்துடன் சிந்தித்திருந்தால் அக்கட்சி தோல்விக்கான காரணங்களை அலசியிருந்திருக்கும். மேலும் அதிருப்தியில் இருக்கும் யெஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கும். ஜஸ்வந்த் சிங்கையும் அநாகரீகமாக வெளியேற்றியிருக்காது. அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் ஒரு செயல் திட்டம் வரைந்திருக்கும். இவை எதுவும் செய்யாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஜஸ்வந்தை மட்டும் அவசரகதியில் கட்சியிலிருந்து நீக்கி விட்டு மற்றபடி உருப்படியாக ஏதும் செய்யாமல் சிந்தனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டது பா.ஜ.க. சிம்லாவிலிருந்து டில்லி திரும்பியபிறகும் அதிருப்தியாளர்களை கூப்பிட்டு பேசவில்லை தலைமை. வெறுத்துப்போன அருண் ஷோரி என்.டி.டிவி தொலைக்காட்சிக்கு முதலிலேயே சொன்னது போல் பேட்டி கொடுக்க, ஜஸ்வந்த் சிங் மற்ற பல புகார்களை வரிசையாக அடுக்கி அத்வானியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த, 2005 லிருந்து அத்வானியின் சரிவிற்ககுப் பெரிதும் காரணமாயிருந்த சுதீந்த்ர குல்கர்னி (தான் பா.ஜ.க.விற்கு வந்த வேலையை செவ்வனே முடித்த சந்தோஷத்தில்) கட்சியை விட்டு விலக, யெஷ்வந்த் சின்ஹா மீண்டும் பேச ஆரம்பிக்க, இவர்கள் போதாது என்று முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ப்ராஜேஷ் மிஷ்ரா (அத்வானிக்கு சுதீந்த்ர குல்கர்னியை அனுப்பியது போலவே, இவரை வாஜ்பாய்க்கு “செக்” வைக்க எதிர் தரப்பு அனுப்பியது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருக்கின்றது) அவர்களும் காந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில் அத்வானியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த, என்று பா.ஜ.க படாத பாடு பட்டது.
mohan_bhagwat-rss1இதனால் மிகவும் வெறுத்துப்போன ஆர்.எஸ்.எஸ். மீண்டும் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. புயலின் நடுவே லாகவமாக படகு செலுத்திப்போகும் படகோட்டி போல, திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள், ஆழமான பிரச்சனைகளில் பா.ஜ.க சிக்கியிருந்த நேரத்தில், ஊடகங்களின் கேள்விக் கணைகளை லாகவமாக எதிர்கொண்டார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்திற்கு வந்திருந்த பத்திரிகையாளர் அனைவரும் கூட்டம் முடிந்த பின்னர் மோகன்ஜியின் திறமையை வியந்தும் பாராட்டியும் பேசினர். இக்கூட்டத்தில் அவர், தான் ஏற்கனவே ”டைம்ஸ் நௌ” தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் சொன்னதை மீண்டும் நினைவுகூர்ந்தார். மேலும், “ஒரே மனப்போக்கும் சிந்தனையும் உள்ள அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும். நம்முடைய தனிப்பட்ட வேற்றுமைகளும், கருத்து வேறுபாடுகளும், நம் ஒற்றுமையையும் உழைப்பையும் பாதிக்காவண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும். சங்கத்தைப் பொறுத்தவரை இப்போது செய்துகொண்டிருக்கும் நற்பணிகளை மேன்மேலும் அதிகப் படுத்தி இந்நாட்டிற்குச் சேவையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். பா.ஜ.க தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை விரைவில் முடிவிற்குக் கொண்டு வந்து மீண்டும் புத்துணர்வுடன் திகழும். அதற்கான வேலைகளில் பா.ஜ.க முழுமனத்துடன் இறங்கிவிட்டது. அக்கட்சிக்குத் தேவையான சமயத்தில் அறிவுரையும், ஆலோசனையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறி முடித்தார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்த பத்திரிகையாளர் கூட்டத்திற்குப் பிறகு பா.ஜ.க. தலைவர்கள் பலரும் திரு மோகன்ஜியை சந்தித்து ஆலோசனைகள் பெற்றனர். அவரும் அத்வானி அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். தற்போது பா.ஜ.க வில் சற்று அமைதி நிலவுகிறது. எல்லோரும் தற்போதைய நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர் என்பதும், கூடிய விரைவில் உட்கட்சிப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உணர்ந்திருப்பதும் வெளிப்படையாகவே தெரிகின்றது.
மோகன்ஜி தலைமையும் சங்கத்தின் எழுச்சியும்
இந்த பலவீனமான, இக்கட்டான சமயத்தில், சங்க இயக்கங்களின் சேவகர்களுக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கும் மற்றும் அவ்வியக்கங்களுக்கு ஆதரவு அளித்து வரும் மக்களுக்கும், ஊக்கமும் உற்சாகமும் அளிக்கக் கூடிய ஒரே விஷயம் திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைமை பொறுப்பு ஏற்றிருப்பது தான். பொதுத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்னர் தான் பொறுப்பு ஏற்றுக்கொண்டார் என்றாலும், அவர் கடந்த ஆறு மாதங்களாக பணி புரிகின்ற செயற்பாடு, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. தெளிவாக யோசித்து நன்றாக நிலவரங்கள் அறிந்து பேசுவது, திட்டமிட்டு செயல்படுவது, ஊடகங்களை ஆற்றலுடன் எதிர்கொள்வது, பா.ஜ.க வினரை ஒதுக்கியும் விடாமல் அதே சமயத்தில் மிக அதிகமாகவும் தலையிடாமல் அவர்களுக்கு தக்க சமயத்தில் தேவையான ஆலோசனைகள் வழங்கி கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த விதம், என அனைத்துச் செயல்களும் மிகவும் பாராட்டத் தக்க விதத்தில் அமைந்துள்ளன.
மோகன்ஜி பாக்வத் அவர்களின் செயல்பாட்டினால், பா.ஜ.க வின் தலைமையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், இளைய வயதினர்களுக்கு வாய்ப்புகள் கிட்டும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரத்தில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும், அவர்களுக்கு ஏற்ப மற்ற பதவிகள் தரப் படுவார்கள் என்றும் பேசப்படுகிறது. வருகின்ற டிசம்பர் மாதத்துடன் ராஜ்நாத் சிங்கின் பதவிக் காலம் முடிவடைவதால், வேறு ஒரு இளைய வயதுடைய தலைவர் அனைவரின் சம்மதத்துடன் பதவியேற்றப்படுவார் என்றும், மாநிலத் தலைவர்கள் சிலரும் மத்தியப் பணிகளுக்கு அழைக்கப் படுவார்கள் என்றும், பல இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப் படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தன்னுடைய ஆலோசனைகளுக்கும், அறிவுரைகளுக்கும், செயல்பாட்டிற்கும் தக்க அங்கீகாரம் கிடைக்கும் விதமாக, மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை சென்று மோகன்ஜி சந்தித்தது, அவரின் நற்பண்பைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.
மோகன்ஜியின் வருகையும், செயல்பாடுகளும், சங்கத்தில் ஒரு எழுச்சியையும் புத்துணர்ச்சியையும் அளித்துள்ளன என்றால் அது மிகையாகாது. அத்வானியும் லோக்சபையின் எதிர்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து வேறு ஒரு இளைஞருக்கு வழிவிட்டு பிதாமகர் ஸ்தானத்திலிருந்து கட்சியை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பும் பெரும்பாலும் இருந்தாலும், கிடைக்கின்ற செய்திகளை வைத்துப் பார்க்கின்றபோது அத்வானி இப்போதைக்குக் வெளியேறுவதாகத் தெரியவில்லை. அவருடைய முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி 13-ஆம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழில், “Advani will prove his obituary-writers wrong” என்கிற கட்டுரையில், அத்வானி இப்போதைக்கு அரசியலை விட்டு விலகமாட்டார் என்றே எழுதியுள்ளார். இந்த ஒரு விஷயம் மோஹன்ஜி அவர்களுக்குச் சவாலாகவே இருந்தாலும், அவரும் அத்வானியும் கட்சி மற்றும் சங்கத்தின் நலன் கருதி, பெரும்பாலானோர் எதிர்பார்க்கும் படி நல்ல முடிவை எடுப்பார்கள் என்றே தோன்றுகிறது
சங்கம் செய்ய வேண்டியது.
advani_vajpayee2009 தேர்தலின் முடிவுகளில் பா.ஜ.க விற்கு மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் ஒரு முக்கியமான பாடம் உள்ளது. கடந்த காலக் கட்டத்தில், குறிப்பாக சென்ற பத்து ஆண்டுகளில், ஆர்.எஸ்.எஸ் அரசியல் விவகாரங்களை முழுவதுமாகப் பா.ஜ.க விடமே ஒப்படைத்து விட்டு ஒதுங்கியிருந்தது தவறு என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் பிராபல்யமும், கட்சியில் அவர்கள் மேலிருந்த அபரிமிதமான வழிபாடும், அதற்குக் காரணமாக இருக்கலாம். அவ்விரு பெருந்தலைவர்களும் கூட “சர்சங்கசலக்” (ஆர்.எஸ்.எஸ். தலைமை) என்கிற ஸ்தானத்திற்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்கத் தவறிவிட்டார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், சங்கப் பின்னணி இல்லாமல், சங்கத்தின் வெளியிலிருந்து பா.ஜ.கவில் இணைந்த பலர் பல பதவிகளில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அவர்கள் சங்கத்தின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்.
சங்கப் பின்னணியும், சங்க உறவும் இல்லாத நபர்களின் கைகள் கட்சியில் ஓங்கியிருப்பது சங்கத்திற்கும், கட்சிக்கும், நாட்டிற்கும் நல்லதல்ல. 2004, 2009 தேர்தல்களின் முடிவுகள் இந்த உண்மையைத் தெளிவாக நிரூபித்து விட்டன. மேலும் கடந்த பத்து ஆண்டுகளில், பல நல்ல, செயல் திறன் கொண்ட தலைவர்களை (உமா பாரதி, கல்யாண் சிங், மற்றும் சிலர்) சங்கமும், கட்சியும் இழந்திருக்கின்றன. விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களின் அதிருப்தியையும் பா.ஜ.க சம்பாதித்துக் கொண்டுள்ளது. அவர்களும் இவர்களின் இக்கட்டான சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் சில முறை நடந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் சமயங்களில் கூட ஒற்றுமையில்லாமல் இருந்திருக்கிறார்கள். இவையெல்லாம் பெரிய இழப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.
எனவே, கடந்த பத்து ஆண்டுகளின் நிகழ்வுகளையெல்லாம் எண்ணிப் பார்த்து, அவை போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாவண்ணம், சஙத்தின் அனைத்து இயக்கங்களும் ஒற்றுமையுடன் செயல் படுமாறு ஒரு மாபெரும் செயல் திட்டம் தயார் செய்யப் படவேண்டும். அந்தந்த இயக்கம் அவரவர்களுக்கு என்றுள்ள தளங்களில் தீவிரமாக செயல் படும் அதே நேரத்தில், தேசத்தின் பிரச்சனை என்று வரும்போது அனைத்து இயக்கங்களும் ஒரே கூறையின் கீழ் கூடி சங்கத்தின் பிரம்மாண்ட சக்தியை காண்பிக்க வேண்டும். சங்க இயக்கங்கள் ஆன்மீக குருமார்களிடத்தும் இடைவெளியில்லாத உறவும் நட்பும் எப்போதும் கொண்டிருக்க வேண்டும். அனைத்து இயக்கங்களும் ஒன்றாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இயக்கங்களின் ஒற்றுமையைப் பார்த்துத்தான் மக்கள் ஒன்று கூடுவார்கள். ஆகவே அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ் அரசியல் பக்கம் பார்க்க வேண்டும் என்பதும், பா.ஜ.கவை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
எந்த அரசனும் தன்னிச்சையாக ஆட்சி செய்தது கிடையாது. எந்த மன்னனும் மந்திரியின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் செயல் படுவான். ஒவ்வொரு சக்ரவர்த்தியின் பின்னாலும் ஒரு ஆச்சாரியர் இருப்பார். சந்த்ரகுப்தனுக்கு சாணக்கியர் போல! ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒரு குரு இருப்பார். அவர் சொல்படியே அந்த வம்சத்தினர் ஆட்சி செய்வார்கள். ரகு வம்சத்திற்கு வசிஷ்டர் போல! எனவே, இந்த தேசத்தின் இந்து இயக்கங்கள் அரசியல், ஆன்மீக, கலாசார பாதைகளில் தனித்தனியாகப் பயணம் செய்தாலும், அனைவரும் பயணம் மேற்கொண்ட குறிக்கோள் “தேச முன்னேற்றம்” என்ற ஒரே குறிக்கோள் தான். அரசியல், ஆன்மீகம், கலாசாரம் ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்ணைந்து இருப்பது தான் இந்த தேசத்தின் பாரம்பரியம். அதுதான் ”ஹிந்துத்துவம்” என்பது. ஒரே குறிக்கோளுடன் சென்றுகொண்டிருக்கின்ற பயணங்களின் அடிப்படையும் அதே ஹிந்துத்துவம் தான். இந்த உண்மையை மோகன்ஜி பாக்வத் அவர்கள் நன்றாகவே உணர்ந்திருகிறார் என்பது தான் நம்பிக்கை தரும் செய்தி. இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த தேசத்தில் பிறந்து, இம்மண்ணில் வளர்ந்து வரும் அனைவருக்கும் இந்த அடையாளம் பொது என்று அவர் தெளிவு படக் கூறியது தான். அதாவது ஜாதி மத வேறு பாடுகள் எதுவும் இல்லாமல் இந்த பூமியைச் சேர்ந்த அனைவருக்கும் இந்த ஹிந்துத்துவ அடையாளம் பொதுவானது என்பது தான்!
சென்னையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசிய போது சொன்னது: “எங்கள் இயக்கம் தேசிய கலாசார இயக்கம். சமூகத்தை ஹிந்துத்துவம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில், ஹிந்து அடையாளத்துடன் முன்னேற்றுவதே எங்கள் பணி. உலகின் தலை சிறந்த நாடாக பாரதம் விளங்குவது இதன் மூலமே தான் சாத்தியம். நாங்கள் அரசியல் இயக்கம் அல்ல. தினசரி அரசியல் செய்ய மாட்டோம். ஆனால் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான முடிவுகளை அரசாங்கமோ, பாராளுமன்றமோ எடுகும்போது, இந்த தேசத்தின் நலன் கருதி, எந்த மாதிரியான முடிவு நல்ல முடிவோ, அம்முடிவை எடுக்குமாறு செய்வதே எங்கள் தலையாய பணியாக இருக்கும்”.
எனவே, ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க வின் நடவடிக்கைகளைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்க, அதன்படி பா.ஜ.க நடந்துகொள்வது, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. மட்டுமல்லாமல் இந்த தேசத்திற்கும் நன்மை பயக்கும். 

சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

சீனாவில் இப்போதெல்லாம் மதத்தை இழிவாகப் பார்ப்பதில்லை. 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 17 ஆவது சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹூ ஜிண்டாவோ நிகழ்த்திய உரையில் ஒரு பத்தி, மதத்திற்காக முழுமையாக ஒதுக்கப்பட்டு இருந்தது. பேராயர்கள், மதகுருக்கள், துறவிகள், மத நம்பிக்கையாளர்கள் ஆகியோர் எல்லாம் சீனாவின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் ஆக்கப்பூர்வ பங்கு வகிக்க முடியும் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை அவர் சுட்டிக்காட்டினார். எனவே மதம் மக்களுக்கு அபின் போன்றது என்ற கடந்த கால கோட்பாடு காலாவதி ஆகிவிட்டது.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனமான ‘சின் குவா’ மத சுதந்திரத்தை வலியுறுத்தி வருகிறது. நல்லிணக்கம் மிக்க சமூகத்தைக் கட்டமைப்பதில் மதம் முக்கியப் பங்காற்றி வருகிறது என்று ‘சின் குவா’ குறிப்பிட்டு வருகிறது. இதை முக்கியமான அம்சமாகக் கருதி இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். நார்மல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 சீனப் பேராசிரியர்கள் மத நம்பிக்கை தொடர்பாக விரிவான ஆரய்ச்சி நடத்தினார்கள். 2007 இல் இந்த ஆராய்ச்சி நடைபெற்ற்து. 4,500 பேரிடம் கருத்து கேட்டு விவரம் சேகரிக்கப்பட்டது.
மொத்த ஜனத்தொகையில் 31 சதவீதத்தினர் மத நம்பிக்கை உள்ளவர்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 16 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்களில் 60 சதவீதத்தினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. 1990 களில் கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்கள் 8 சதவீதத்திற்கும் குறைவே. இது இப்போது 12 சதவீதமாக உயர்ந்துவிட்டது. கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் அதிகரிப்பு முக்கியமான விஷயமாகும்.
சீனாவில் பிரம்மாண்டமான கிறிஸ்தவ தேவாலயம் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்டு கட்சியில் முன்பு முக்கிய பொறுப்பாளராக இருந்த ஜாவோ ஜியாவோ என்பவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி பிரச்சாரம் செய்துவருகிறார். சீனாவில் 13 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி சீனாவில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சம் மட்டும்தான். இதில் 1 கோடியே 10 லட்சம் புரோட்டஸ்டண்டுகள் ஆவர். 50 லட்சம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவர். ஜாவோ ஜியாவோ தெரிவித்துள்ள புள்ளிவிவரம் உண்மையெனில் சீன கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். சீன கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 கோடியே 40 லட்சம் மட்டுமே.
சீனாவில் மாபெரும் மற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வெறும் பொருளாதார மாற்றங்களை மட்டும் நாம் பார்க்கக்கூடாது.
பிரம்மாண்டமான அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன, வர்த்தக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒலிம்பிக் அரங்கங்கள் நிமாணிக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இதற்கு அப்பாலும் பல அபூர்வ நிகழ்வுகள் அங்கு நடைபெற்றுள்ளன. மேற்கத்திய பார்வை என்பது உலகியல் சார்ந்தது. உலகியல் சார்பற்றவற்றையும் கவனிப்பதுதான் கிழக்கத்திய பார்வையாகும்.
chinese_krishnaமத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நடைபெற்று வரும் மாறுதல்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். முஸ்ஸிம்களின் செயல்பாடும், கிறிஸ்தவர்களின் செயல்பாடும் குறிப்பாக தரைக்கு அடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கிறிஸ்தவ தேவாலயமும் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளன. மத்திய தர வர்க்கத்தினரின் உணவுப் பழக்க வழக்கமும் மாறத் தொடங்கி உள்ளது. சீனர்கள் பாரம்பரியமாக அரிசி உணவை சாப்பிடுவது வழக்கம். இப்போது அரிசி உணவைச் சாப்பிடுவது குறைந்துள்ளது. நன்கு படிக்காத ஏழைகள் மட்டும்தான் அரிசியை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். புதிதாக கிறிஸ்தவத்திஅத் தழுவியவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளித்துள்ளன. வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும் இது உதவுகிறது.
மேற்கு பகுதிகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. சீனாவில் கடந்த காலத்தைப் பற்றி அறியும் ஆவல் மேலோங்கி உள்ளது. சீனாவில் 1960 களில் கலாசார புரட்சி நடைபெற்றது. பெய்ஜிங் நகரில் உள்ள மிங் வம்சத்தைச் சேர்ந்த ராஜ பரம்பரையினரின் சமாதிகள் வெண்பளிங்கில் பளிச்சிட்டு வந்தன. கலாசார புரட்சியின்போது அவற்றுக்கெல்லாம் சிவப்பு வர்ணம் தீட்டப்பட்டது. இப்போது அவற்றை மீண்டும் வெள்ளை நிறத்திற்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதில் முழு வெற்றி கிடைக்கவில்லை. சுற்றுலா வழிகாட்டிகள் இது குறித்துப் பேச தயங்குவது கிடையாது. பெய்ஜிங் நகர் அருகே உள்ள ஒரு புராதனமான இடத்தில் கிங் ராஜ வம்சத்தினரின் கோடைகால அரண்மனை உள்ளது. அதில் 10 கரங்களைக் கொண்ட புத்தரின் சிலை உள்ளது. இதற்கும் விஷ்ணுவுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. இது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து, வெளிநாடுகளில் பிரிட்டீஷ் கவுன்சிலை நிறுவி தனது கலாசாரத்தை பரப்பி வருவதைப்போல சீனா 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கன்பூஷ்யஸ் நிறுவனத்தை நிறுவி தொன்மையான சீன ஞானத்தைப் பரப்பி வருகிறது.
மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு சீனாவைப் பார்ப்பதை நாம் கைவிட வேண்டும். சீனாவில் பொருளாதார வளர்ச்சி அமோகமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆழமான ஆன்மிக நாட்டம் வலுவாக உள்ளது என்று கூற முடியவில்லை. மார்க்சிஸம் சீனாவில் அர்த்தத்தை இழந்துவிட்டது. புதிய சீனா நமக்கு ஒரு மகத்தான சவாலாகும். இந்தியாவும், சீனாவும் பழங்காலம் முதலே அறிவு ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தன. சீனாவும் பல மதங்களைக் கொண்ட கலாசாரங்களைக் கொண்ட நாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா மீது சீனர்களுக்கு மிகுந்த நாட்டம் உள்ளது.
1938 முதல் 1942 வரை அமெரிக்காவில் சீனத் தூதராகச் செயல்பட்ட ஜூஷி, ’சீனாவை இந்தியா கலாசார ரீதியாக ஆக்ரமித்து 20 நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு போர் வீரர் கூட எல்லையைத் தாண்டி வராமல் இதை சாதிக்க முடிந்துள்ளது’ என்று கூறியுள்ளார். சீனாவை வெல்லவும், ஆதிக்கம் செலுத்தவும் நாம் மென்மையான அணுகுமுறையைக் கையாள வேண்டும். சீனாவில் 50க்கும் மேற்பட்ட பாரதிய வித்யா பவன் கிளைகளை நாம் நிறுவவேண்டும். ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடித்து வினியோகிக்க வேண்டும். இதன்மூலம் நமது இளைய சகோதரனான சீனாவில் எஞ்சியுள்ள மிச்சம் மீதி கம்யூனிசத்தையும் துடைத்தெறிய முடியும். நாம் அமெரிக்காவில் ஆன்மிகத்தைப் பரப்புவதில் நாட்டம் செலுத்தி வருகிறோம். சீனாவை நோக்கியும் நமது ஆன்மிகப் பார்வை திரும்ப வேண்டும்.
இப்போதைய சீன நிலவரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நமது செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். சீனாவில் கம்யூனிசம் நலிந்து கொண்டே வருகிறது. சீன மக்கள் ஒரு மாற்று ஏற்பாட்டை விரும்புகிறார்கள். அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள். மதமும் கலாசாரமும் விலக்கி வைக்கப்பட்டிருந்த காலம் சீனாவில் முற்றிலுமாக காலாவதியாகிவிட்டது. இதைப்போல பல விஷயங்கள் உள்ளன.
பார்க்க:
பேராசியரின் மற்றொரு கட்டுரை (தமிழில்: ஜடாயு)
சீனாவின் தலைவலி, இந்தியாவின் நிவாரணி?
சீனா அதிகாரப்பூர்வமாக 5 மதங்களை அங்கீகரித்துள்ளது. அவற்றுக்கு அனுமதியும் அளித்துள்ளது. புத்தமதம், இஸ்லாம், தாவோயிஸம், புர்ர்ட்டஸ்டண்ட் கிறிஸ்தவம், கத்தோலிக்க கிறிஸ்தவம் ஆகியவைதான் அந்த 5 மதங்கள் ஆகும். நமது கலாசாரமும், மதமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரிக்கவே முடியாது. பக்தி இல்லை என்றால், கர்னாடக இசை எப்படி இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அது இசையாகவும் இருக்காது, கலையாகவும் இருக்காது. நமது இசை, நாடகம், கலை, யோகா, ஆயுர்வேதம், ஆன்மிக நூலகள் ஆகியவற்றால் சீனாவை குறிப்பாக சீனாவில் உள்ள நடுத்தர மக்களை கலாசார ரீதியாக முற்றுகையிட்டு அவர்களை வெல்ல வேண்டும். இது நமக்கு புதிதல்ல. ஏற்கனவே நாம் இதைச் செய்துள்ளோம்.
நமது மனோபாவம் மாறவேண்டும் என்பதும் முக்கியமான அம்சமாகும். சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும்.
கொள்கை வடிவமைப்பாளர்கள் 60 களிலும், 70 களிலும்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவர்கள் 2009 க்கு வரவேயில்லை. சீனவில் மிகப்பெரிய சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு பொருளாதார வளம் செழிப்பாக இருக்கிறது. ஆனால் ஆன்மிக ரீதியாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் இந்தியத் தூதராக செயல்பட்ட நிருபமா ராவ் இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி ஏற்றுள்ளார். அவர் சீனாவுக்குத் தகுந்தவர்களை அனுப்பி வைக்க வேண்டும். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆன்மிக உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சீனத் தோழர் ஒருவர் கூறியது சற்று கசப்பானதுதான். அது துரதிர்ஷ்டமானதாகக் கூட தோன்றலாம். ஆனால் அதில் உண்மையின் கீற்று காணப்படுகிறது. ‘நமது இரண்டு நாடுகளும் வேரற்ற, திடமற்ற அன்னிய கல்வி பயின்றவர்களால் ஆளப்பட்டு வருவது விசித்திரமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு சொந்த தேசங்களின் கலாசார வேர்கள் குறித்தோ, பண்பாட்டுச் செழுமை குறித்தோ ஆழமான அறிவு எதுவும் கிடையாது’ என்பதுதான் அவர் கூறிய கருத்தாகும்.
ஆசியாவில் இந்தியாவும், சீனாவும் வல்லரசுகளாக நிமிரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத் தருணத்தில் சீனாவில் கம்யூனிஸத்தை முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டு அங்கு நாம் ஆன்மிக முற்றுகையிட்டால் அது இருதரப்புக்கும் பரஸ்பர நன்மை அளிப்பதாக முடியும். இந்த ஆன்மிக முற்றுகையை மேற்கொள்ள நாம் ஆயத்தமாகத் தயாரா?

மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்

இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களில் ‘கிழவன் சேதுபதி’ சிறப்பானவன். அவன் வரலாற்றை திரு மீ.மனோகரன் எழுதியிருக்கிறார். அதில் பிரிட்டோ பாதிரியார் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. தென் மாவட்டங்களில் மதமாற்றம் எப்படி நடந்தது என்பதற்கு இந்த வரலாறு ஒரு எடுத்துக்காட்டு. இனி பிரிட்டோ பாதிரியார் பற்றி படியுங்கள்.
பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு பிரிவினர். இவர்கள் மறவர் நாட்டின் அதிபதியாக பலகாலம் விளங்கி வந்தவர்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது.
2252_bhaskara_sethupatiஇத்தகைய பாரம்பரியமிக்க சேதுபதிகளில் பலரும் புகழ்வாய்ந்தவர்கள். கிழவன் சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி இப்படிப் பலர். இவர்களில் பாஸ்கர சேதுபதி சுமார் நூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர். சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவில் சிகாகோவில் நடந்த சர்வ மத மாநாட்டுக்கு அனுப்பி வைத்தவர். அவர் 1897ல் தாய்நாடு திரும்பிய போது இலங்கை வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து காலடி வைத்த போது, சுவாமிஜியின் காலடி பாரத புண்ணிய பூமியில் படுவதற்கு முன் தன் தலைமீது காலடி வைக்க வேண்டுமென்று கேட்டுப் பெற்றவர். பற்பல தானதர்மங்களைச் செய்தவர். அந்தக் காலத்திலேயே சென்னை கிருத்துவக் கல்லூரியில் எஃப்.ஏ. எனப்படும் இண்டெர்மீடியட் பாஸ் செய்தவர். ஆங்கிலம், தமிழ் இவற்றில் பாண்டித்தியம் வாய்ந்தவர். கலை இலக்கியங்களைப் போற்றியவர். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களெல்லாம் வாழ்ந்த குலம் ‘சேதுபதிகள்’ குலம்.
ஆயினும் இவர்களது வரலாற்றை ஆய்ந்து பார்க்க விரும்பினால், நம்மவர்கள் எவரும் எழுதிவைக்காத நிலையில் போர்த்துகீசிய பாதிரிமார்களும், கிறிஸ்தவ மதப் பிரச்சாகர்களும் எழுதிவைத்தவைகளைத்தான் நம் வரலாற்றாசிரியர்கள் எழுதி வருகிறார்கள். இப்படி ஒருதலைப் பட்சமான செய்திகளை பாதிரிமார்களின் குறிப்புகளிலிருந்தும், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கெசட்டுகளிலிருந்தும் எடுத்தாளும் நம்மவர்கள் இதிலுள்ள உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு மாறாக, அவர்களது செயல்களைப் போற்றியும், இங்கிருந்த இந்து மன்னர்களின் செய்கைகளைக் குறை கூறியும் எழுதி வைத்திருப்பது தலைக்குனிவை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்டதொரு வரலாற்று செய்தி இராமநாதபுரத்தை நெடுங்காலம் ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் நடந்திருப்பதாக நமக்குத் தெரிகிறது.
பிரிட்டோ எனும் போர்த்துகீசிய பாதிரியாருக்கு மனிதாபிமானத்தோடு கிழவன் சேதுபதி ஒரு வழிபாட்டுத் தலத்தைக் கட்டிக்கொண்டு தன் மத வழிபாட்டை நடத்த அனுமதி கொடுத்தான். அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த பிரிட்டோ பாதிரியார் மறவர்களை மதமாற்றம் செய்யத் தலைப்பட்டார். அவர் எல்லை மீறி அரண்மனையிலேயே கைவைத்ததும், அதனால் கிழவன் சேதுபதியின் மருமகளும், தம்பியும் கூட பாதிக்கப் பட்டதும், மன்னன் விழித்துக் கொண்டான். தன் தம்பியிடம்  ”ஏன் இப்படிச் செய்தாய்? நமது இந்து தர்மத்தில் இல்லாத எதை அந்த கிருத்துவ மதத்தில் கண்டுவிட்டாய்? அந்த பாதிரியார் உன்னை என்ன சொல்லி மதமாற்றம் செய்தார்? மன்னர் குடும்பத்து நீயே மதம் மாறினால், அது இந்த ராஜ்யத்துக்கே ஆபத்து அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர் அது என் இஷ்டம் என்றார். சரி, இனி இவனிடம் பேசிப் பயனில்லை என்று அந்த ஜான் பிரிட்டோ பாதிரியாரை வரவழைத்து அவர் மீது விசாரணை நடத்தப் பட்டது.  பாதிரியார் தண்டிக்கப்பட்டார்.
john_de_brito_stampஇதனை அன்னிய அடிவருடிகள், வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்கள் கூறும் ஒருதலைப் பட்சமான செய்திகளைக் கொண்டு, அந்த பாதிரியாரை வானளாவப் புகழ்ந்து அவரது மரணத்தைப் போற்றியும், கிழவன் சேதுபதியின் முடிவைக் கண்டித்தும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சமீபத்தில் “இன்று” என்ற தலைப்பில் செய்திக்கு முன் ஒளிபரப்பும் வரலாற்றுச் செய்தியொன்றில் ஒரு தொலைக்காட்சி ஊடகம், இந்த பிரிட்டோ பாதிரியார் செய்தது பெரும் தியாகம் என்றெல்லாம் வர்ணித்தார்கள். இப்போதும் கூட இந்த மதமாற்ற நாடகங்களைப் புரிந்து கொள்ளாத நம் மக்களைப் பற்றி நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.
ஆனால், நடந்த வரலாறு என்ன?
நாம் பார்க்கப் போகும் இந்தப் பாதிரியாரின் முழுப்பெயர் ஜான் டி பிரிட்டோ என்பதாகும். இவர் காலம் 1647 முதல் 1693 வரை. இவர் போர்த்துகல் நாட்டில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார். பிரேசில் நாட்டில் இவரது தந்தை கவர்னராக இருந்தாராம். வசதியான செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த இந்த பிரிட்டோ, கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் இந்தியா செல்லத் துடித்தார். அதன் காரணமாக இவர் மதபோதகராவதற்காக 1662இல் அதற்கான பள்ளியில் சேர்ந்து படித்தார். ஐரோப்பா தவிர்த்த ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களிலுள்ள நாடுகளில் மதப் பிரச்சாரம், மதமாற்றம் இவைகளைச் செய்வதிலுள்ள ஆபத்துக்களை உணர்ந்தே இவர் இந்தியா வந்தார். குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் மறவர் சமூக மக்களைக் குறிவைத்து இவர் மதமாற்றம் செய்ய விழைந்தார்.
தனது 26ஆவது வயதில் 1674இல் இவர் இந்தியா வந்தார். அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து பார்த்துத் தனது மதமாற்றப் பணிக்குத் தென்னிந்தியாவில் மறவர் பூமியே சிறந்தது என்ற எண்ணத்தில் இவர் 1686இல் மதுரை வந்து சேர்ந்தார். அங்கிருந்து பனங்குடி எனும் ஊருக்கு அருகிலுள்ள வெள்ளைக்குளம் எனுமிடத்தில்  தனது மதமாற்ற முகாமைத் தொடங்கினார். தாங்கள் பரம்பரை பரம்பரையாக போற்றிப் பாதுகாத்துவந்த சமய நெறிகளில் அலுத்துப் போயோ என்னவோ அந்தப் பாதிரியார் இங்கு குடியேறிய சில நாட்களுக்குள்ளாக, சில பிராமணர்கள் உட்பட இவரது வாசாலப் பேச்சினாலும், புதிய வழிபாட்டு முறைகளைக் கண்டு மோகித்தும், மதம் மாறினார்கள். இது அந்தப் பாதிரியாருக்கு உற்சாகத்தை ஊட்டியிருக்க வேண்டும். பரவாயில்லையே முதல் வியாபாரமே கண்டு முதல் அதிகம் பார்த்து விட்டோமே, இனி மேலும் அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்றால் மக்கள் மந்தை மந்தையாக மதம் மாறுவார்கள் போலிருக்கிறதே என்று இவர் வியந்து போனார்.
நம் மக்களுக்கு அந்தக் காலத்தில் வெள்ளைத் தோலையும், அவர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழையும் கண்டதும் ஒருவித மோகம் ஏற்பட்டு விடுகிறது. இன்றுகூட அயல்நாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார சுற்றுலாப் பயணிகளின் பின்னால், நமது குழந்தைகள் காணாததைக் கண்டது போல ஓடுவதைப் பார்க்கிறோமல்லவா? அந்த தாழ்வு மனப்பான்மைதான் நம் அப்பாவி மக்களை அவர்கள் பின் ஓடவைத்தது.
sethupathi_kings_palaceபிரிட்டோ பாதிரியாரின் புதிய சீடர்கள் அவருக்கு அருளானந்தர் என்று பெயர் சூட்டி பெருமைப் படுத்தினர். இவர் இந்தப் பகுதியில் குடியேறிய ஒரு சில நாட்களிலேயே இவருக்கு நிறையபேர் மதமாற்றத்திற்கு இணங்கி விட்டனர். அந்த நிலையில் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் செல்லும் நோக்கில் இவர் சிவகங்கை வழியாக பாகனேரிக்கு நான்கு மைல் தூரத்தில் உள்ள மேலமங்கலம் எனும் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த இராமநாதபுரம் கிழவன் சேதுபதியின் முதலமைச்சராக இருந்த குமார பிள்ளை இந்தப் பாதிரியார் தங்கள் மக்களை மதமாற்றம் செய்யும் செய்தியறிந்து மறவர் படையைக் கொண்டு பிரிட்டோ பாதிரியாரைக் கைது செய்தார். அந்த மறவர் படையினர் இந்தப் பாதிரியாரையும் அவருடன் வந்தவர்களையும் காளையார்கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் பத்து நாட்கள் காளையார் கோயில் சிறையில் இருந்த பிறகு இவர்கள் அனைவரும் பாகனேரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது கிழவன் சேதுபதியிடமிருந்து, கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பாதிரியாரையும் அவரோடு இருப்பவர்களையும் இராமநாதபுரத்துக்குக் கொண்டு வரும்படி கட்டளை வந்தது.
அங்கு மன்னனின் அரசவையில் பிரிட்டோ பாதிரியார் விசாரிக்கப்பட்டார்.  அந்த விசாரணையின் போது, இந்த நாட்டில் இந்துக்கள் பல கடவுளர்களை வணங்குவதாகவும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் காட்டுமிராண்டித்தனமாக இருப்பதாகவும், கல்லையும், மண்ணையும், மரத்தையும் வணங்கும் இவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவதுதான் தனது மதத்தின் நோக்கமென்றும், அந்தப் புனிதமான பணியைத்தான் தான் செய்து வருவதாகவும் பிரிட்டோ வாதாடினார். அப்படி என்னதான் உங்கள் மதம் போதிக்கிறது என்று மன்னர் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினார். உடனே அவையிலிருந்த பெரியோர்கள், இந்த பாதிரி நம் மன்னனின் மனதைக் கூட கலைத்து விடுவார் என்று அஞ்சினர்.
எனினும் மன்னனின் கட்டளைக்கிணங்க பாதிரியார் அரண்மனைக்குச் சென்று அங்கு அரசனுக்குச் சரிசமமான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு தனது மதத்தின் அருமை பெருமைகளை வர்ணிக்கத் தொடங்கி விட்டார். அவர் சொல்லச் சொல்ல அரசனுக்கு கோபம் கூடியது. ஆனால் தான் குடிப்பழக்கத்துக்கு ஆளானவன், மேலும் பலதாரங்களை மணந்து கொண்டிருப்பவன் என்பதால் ஒருவகைக் குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு  நேரடியாக பாதிரியாரை எதிர்த்து அவன் வாதம் செய்யவில்லை. எனவே சமாளித்துக் கொண்டு அரசன் சொன்னான் “பாதிரியாரே! நீங்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மதத்தைப் பின்பற்றுவதையோ, உங்கள் கடவுளை வணங்குவதையோ நான் தடுக்கவில்லை. ஆனால், எங்களுடைய கலாசாரம், நாகரிகம், பண்பாடு இவைகளுக்கு மாறான எதையும் நீங்கள் உபதேசிக்க நான் அனுமதிக்க முடியாது. மீறி நடந்தால் உங்கள் உயிருக்கு நான் ஜவாப்தாரியல்ல” என்று எச்சரித்து பாதிரியைப் போக விடுத்தான்.
அதன் பிறகு அரசனைச் சந்திக்க பிரிட்டோ பாதிரியார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. சிலகாலம் தென் தமிழ்நாட்டில் தன் மதமாற்ற வேலைகளை நிறைவுற செய்து முடித்த பின் 1687இல் அவர் போர்சுகல் திரும்பினார். இந்தியாவில் வெற்றிகரமாக மதமாற்றங்களைச் செய்துவிட்டு நாடு திரும்பும் பாதிரியாரை அந்நாட்டு மதவாதிகள் உற்சாகமாக வரவேற்றார்கள். போர்ச்சுகலில் சில காலம் இருந்த பிறகு அவருக்கு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்துத் தன் வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்று விரும்பினார். தனது நண்பரான டிகோஸ்டா எனும் பாதிரியாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனக்கு லிஸ்பனில் (போர்த்துகல் தலைநகர்) உள்ள அரண்மனையை விட தென் தமிழ்நாட்டு மறவர் மண்ணே மிகவும் பிடித்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். அதன்படி அவர் மீண்டும் இந்தியாவை அடைந்து கோவாவில் தரையிறங்கினார். அங்கிருந்து பாண்டிய நாட்டு மண்ணுக்கு வந்து தனது பணியைத் தொடங்கினார்.
தாதியாத் தேவன் என்றொரு பாளையக்காரன். இவன் கிழவன் சேதுபதிக்கும் உறவினன்கூட. அவனுக்கு இந்த பாதிரியார் பால் அன்பு ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதோவொரு வினோதமான வியாதி அவனைப் பீடித்தது. பல மருத்துவர்கள் மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. அப்போது செய்தியறிந்து அருளானந்த அடிகளான பாதிரியார் பிரிட்டோ தாதியாத் தேவனைப் பார்க்க வந்தார். அவர் வந்த வேளை அந்த பாளையக்காரனின் வியாதி தீர்ந்து குணமடைந்தான். அவன் பாதிரியாரை மிகவும் மதித்து அவர் ஆலோசனைப்படி ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டு மதமாற்றம் பெற்றான்.
அவன் மதம் மாறியதில் ஓர் சிக்கல் ஏற்பட்டது. அவனுக்கு ஐந்து மனைவியர். அவன் சார்ந்த புதிய மதக் கோட்பாடுகளின்படி அவனுடைய முதல் மனைவி மட்டும்தான் மனைவியாக இருக்க முடியும். மற்ற நால்வரும் அவனுக்குச் சகோதரிகளாகி விடுகின்றனர். இந்த செய்தி அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. முதல் மனைவி நீங்கலாக மற்றவர்கள் என்ன கெஞ்சியும் அவன் அவர்களை மனைவியராக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான் பாதிரியாரின் அறிவுரைப்படி. அவர்கள் நால்வரும் கூடிப்பேசி, நால்வரில் இளையவளான காதலி நாச்சியார் என்பவளை அழைத்து, அவளுக்குப் பெரியப்பன் உறவான கிழவன் சேதுபதியிடம் சென்று முறையிடும்படி கேட்டுக் கொண்டனர்.
அதன்படி காதலி நாச்சியார் சென்று கிழவனிடம் முறையிட்டாள். அவனும் யோசித்தான். தன் உறவினனான தாதியாத் தேவன் மதம் மாறிவிட்டான். தன் தம்பி மகள் கணவன் உறவை இழந்து அழுகிறாள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்த பாதிரியார் மறவர் இனமக்கள் அனைவரையும் மதம் மாற்றிவிடுவார் என்று நினைத்தார். இந்த தாதியாத் தேவன் முன்னர் கிழவன் சேதுபதியோடு அரியணைக்குப் போட்டியிட்டவன். கிழவனுக்குப் பிறகு அரசனாக ஆகக்கூட வாய்ப்புகள் இருந்தன. மற்றவர்களை மதம் மாற்றியதைப் போல சகட்டு மேனிக்கு இந்த மறவர் பூமிக்கு உரிமையுள்ள ஒருவனையுமல்லவா இந்த பாதிரியார் மதம் மாற்றிவிட்டார் என்ற கோபம், வருத்தம். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையுமா? சேதுபதியால் கோபத்தை அடக்கமுடியவில்லை.
john_de_brito_christian_pictureஅரச குடும்பத்தில் ஒருவன் மதம் மாறினால் மக்களும் அல்லவா மதம் மாறிவிடுவார்கள்!  அப்படி மக்கள் மதம் மாறத் துணிந்தால் இந்த தாதியாத் தேவனைத் தனக்கெதிராக ஆட்சியைப் பறிக்க போர்த்துகீசியர் தூண்டக் கூடுமல்லவா என்றெல்லாம் யோசித்தான் கிழவன் சேதுபதி. இது வெறும் மதமாற்றம் மட்டுமல்ல; போர்த்துகீசிய ஆதிக்கத்தை கடற்கரையையும் தாண்டி உள்நாட்டில் ஏற்படுத்தும் நோக்கமும் இதில் இருக்கிறது என்று சிந்தித்தார் அவர். இது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இது ஏதோ கற்பனையான பயம் என்று எண்ணுவதற்கில்லை. வரலாற்று அடிப்படையில் அவ்வாறு சேதுபதி பயந்ததற்குக் காரணங்கள் இருந்தன. 1532 – 1582 காலகட்டத்திலேயே கத்தோலிக்க மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட மீனவர்களுடன் தூத்துக்குடியில் வாழ்ந்தவர்களும் போர்த்துகீசிய குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். இதனை ஒரு கிறிஸ்தவ பாதிரியாரே எழுதியிருக்கிறார். ஆம்! பிஷப் கால்டுவெல் கூறும் செய்தி இது.
ஐரோப்பாவிலிருந்து நாடுபிடிக்கவும், கீழை நாடுகளில் மக்களை மதமாற்றம் செய்வதற்காகவும் பல நாட்டினர் இங்கு வந்தனர். அவர்களில் டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர் என பலரும் அடங்குவர். என்றாலும் இங்கு எவரும் மதமாற்றம் செய்வதை கிழவன் அனுமதிக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார்  அந்த சிறைவாசத்திலேயே இறந்து போனார். பண்பிலும், அரசாட்சியிலும் சிறந்து விளங்கிய கிழவன் சேதுபதி மற்ற வகைகளில், கடற்கரையில் முத்து எடுப்பது முதல், வியாபாரம் வரை அந்நியர்களை அனுமதித்தாலும் இதுபோன்ற மதமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
இது குறித்து பல்வேறுபட்ட சர்ச்சைகள்  உள்ளன.  ஆனால் சில வரலாற்று உண்மைகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. பாதிரியார்கள் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தனர் என்பது அவர்கள் மீது கிழவன் சேதுபதி காழ்ப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்பதைக்காட்டுகிறது.   பாதிரியார்கள் முக்கியமான பிரபல புள்ளிகளை மதமாற்றம் செய்வதில் குறியாக இருந்தார்கள்; தாங்கள் செய்யும் ”தியாகங்களை” எல்லாம் கூறி மக்களின் அனுதாபத்தைப் பெற்று மதமாற்றம் செய்தார்கள் என்பதும் தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்து மதத்தின் அழிவில்தான் கிறிஸ்தவம் வளரமுடியும் என்று அவர்கள் கருதினார்கள் என்பதும் ஐயமின்றி விளங்குகிறது.

“Most of the Historians who have written on this account have mostly dependant on Jesuit records and so their picture is necessarily pro-christian. The historian’s task is to find out the truth. Britto’s death issue was carefully propagated in such a way so as to create public sympathy in India and Europe”.
- History of Tamilnadu from Viswanatha Nayakar to M.G.Ramachandran: ஆர்.எட்வின் ராஜன் & டி.ஞானசேகர் (பக்கம் 63, 64)
பாதிரியாரின்பால் இரக்கம் உண்டாகும்படி பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது  மிகவும் திட்டமிட்டு நடத்தப் பட்ட செயல்பாடு என்று இவர்கள் சொல்வதிலிருந்து உண்மை நிலவரத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. செயல்பாடுகள் தான் மாறவில்லை! 

இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-1

அருண் ஷோரி (1941-) இந்தியாவின் தலைசிறந்த அரசியல், சமூக சிந்தனையாளர்களில் ஒருவர். உலக வங்கி மற்றும் இந்திய அரசின் திட்டக் குழுக்களில் பொருளாதார நிபுணராகவும், ராஜ்யசபை உறுப்பினராகவும், இந்திய அரசில் மத்திய அமைச்சராகவும் (1998-2004) ,  ”டைம்ஸ் ஆப் இந்தியா” மற்றும் ”இந்தியன் எக்ஸ்பிரஸ்” இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். நேர்மையும், துணிச்சலும் கொண்ட உறுதியான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளுக்காகவும்,  கூர்மையான, சமரசமற்ற ஆய்வு நோக்கிற்காகவும் பெரிதும் மதிக்கப் படுபவர்.  சமகால இந்திய அரசியல், சமூகம், சட்டம், பொருளாதாரம் ஆகியவை தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நூல்களையும் எழுதியிருக்கிறார்.  கிறிஸ்தவ மிஷநரிகள், மதமாற்றங்கள், அவற்றின் சமூக விளைவுகள் பற்றி அவர் எழுதியிருக்கும்  இரண்டு முக்கியமான நூல்கள் பற்றியும், அவை உருவானதன் பின்னணி பற்றியும் எடுத்துரைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
அது 1994ஆம் ஆண்டின்  ஜனவரி மாதம்.  இந்தியாவின் தலையாய கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பான இந்திய கத்தோலிக்க பிஷப்கள் மாநாடு  (CBCI – Catholic Bishop’s Conference of India)  தனது 50வது ஆண்டு விழாவை விமரிசையாக்க் கொண்டாடிக் கொண்டிருந்தது.  கிறிஸ்தவ மிஷநரிகளின் செயல்பாடுகள் குறித்து “இந்துத் தரப்பின் மதிப்பீடு” என்ற வகையில் பேசுவதற்காக அருண் ஷோரி அழைக்கப் பட்டார். ஜனவரி-5ம் தேதி புணேயில் நடந்த அந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து பிஷப்கள், பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.  மிஷநரிகள் பற்றிய பொதுவான விஷயங்களைத் தொட்டுச் சென்ற ஷோரியின் உரைக்குப் பின், கலந்து கொண்டவர்கள் ஷோரியை நோக்கி பல்வேறு விதமான கேள்விகளை எழுப்ப, அவை அனைத்திற்கும்  அவர் பதிலளித்தார். பின்னர், இந்த உரையை கத்தோலிக்க சபை தனது நினைவு மலரிலும் வெளியிட்டது.
இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபையின் பணியைப் பற்றி ஒட்டுமொத்தமாக சுயமதிப்பீடு செய்து கொள்வதும் இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக இருந்தது. அதன்படி, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் என்ற வகையில் இது தொடர்பான இரண்டு மையமான ஆவணங்கள் அருண் ஷோரியின் பார்வைக்கு வந்தன. ”இந்தியாவில் மதப்பிரசாரப் போக்குகளும், பிரசினைகளும்: CBCI  கள ஆய்வுகளின் அடிப்படையில்”  என்ற ஆவணம் அவருக்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப் பட்டது. ”இந்தியாவில் நமக்காகத் திறந்திருக்கும் வழிகள்: நமது பொதுவான தேடல்கள்”  என்ற ஆவணம் கூட்டத்தின் போது அவருக்கு வழங்கப் பட்ட்து. இந்த இரண்டு ஆவணங்களையும் கவனமாகப் படித்தார் அருண் ஷோரி. கிறிஸ்தவ மிஷநரிகள் பற்றிய தனது புரிதல்  முழுமையானதாக இல்லையோ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்ட்து.
உடனே இது தொடர்பான பல தரவுகளையும் தேடிப் பிடித்துத் தனது ஆய்வுகளைத் தொடங்கினார். அடிப்படையான கிறிஸ்தவ இறையியல், இந்தியாவில் கிறிஸ்தவம் பரவியதன் வரலாறு,  மெக்காலே, ட்ரெவிலியன் (Trevelyan),  ரிச்சர்ட் டெம்பிள் ஆகிய பிரிட்டிஷ் காலனிய நிர்வாகிகளின் எழுத்துக்கள் மற்றும் உரைகள்,  வரலாற்று/மொழி அறிஞர்கள் என்ற போர்வையில் உலவிய மாக்ஸ் முல்லர், மோனியர் வில்லியம்ஸ் போன்ற் திரைமறைவு மிஷநரிகளின் படைப்புகள், 1853ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியாவில் கிறிஸ்தவ மத்த்தைப் பரப்புவது அரசின் தார்மீகக் கடமை என்பதை வலியுறுத்தி மிஷனரிகள் கொண்டு வந்த தீர்மானம், 1930 சைமன் கமிஷன் அறிக்கை, 1956ல் இந்திய அரசு நியமித்த நியோகி கமிட்டி மிஷநரிகளின் மோசடியான மதப்பரப்பல் செயல்பாடுகள் குறித்து அளித்த அறிக்கை.. இது போன்று இந்த விஷயம் தொடர்பான முதன்மை ஆதாரங்கள் (Primary sources) அனைத்தையும் அவர் அலசி ஆராய்ந்தார்.  இதே காலகட்டத்தில் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு எதிராக மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் முதலியோர் இந்துத் தரப்பிலிருந்து வைத்த உறுதியான, ஆணித்தரமான எதிர்வினைகளையும் அவர் படிக்க நேர்ந்தது.  ஆனால் இந்தத் தொடக்க கால இந்து எதிர்வினைகள் பின்னாளில் தேய்ந்து மறைந்ததோடல்லாமல், சுதந்திர இந்தியாவில்,  முற்றிலும் மாறான நிலைப்பாடுகள் ஏற்பட்டு,  கற்றறிந்த இந்துக்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் மிஷநரிகளின் பாஷையையே தாங்களும் உரத்துப் பேசத் தொடங்கி விட்டனர் என்பதையும் அவர் தெளிவாகக் கண்டறிந்தார்.
இந்தத் தீவிர ஆய்வுகளின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஒரு புத்தகமாக எழுதினார். “இந்தியாவில் மிஷநரிகள் – தொடரல்களும், மாறுதல்களும், குழப்பங்களும்” (Missionaries in India:  Continuities, changes, dilemmas)  என்ற அந்த நூல் 1994ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது.
அவரது மகன் விக்ரமாதித்யா குறைப் பிரவசமாக, பிறப்பின் போதே cerebral palsy என்ற  மூளை பாதிப்புடன் மன வளர்ச்சி குன்றிப் பிறந்த  போது ஏற்பட்ட பேரதிர்ச்சியும்,  பதினெட்டு வருடங்களாகத் தன் அன்பு மகனுடன் வாழ்வதும், வாழ்க்கையையும், உலகத்தையும் பற்றிய ஆழமான ஆன்மீகக் கேள்விகளையும், புரிதல்களையும் தன்னுள் ஏற்படுத்தியிருப்பதாக இந்த நூலின் முன்னுரையில் ஷோரி கூறுகிறார்.  பின்னாட்களில் அமைச்சராக இருந்தபோது அளித்த பேட்டி ஒன்றில் தன் மகனைப் பற்றி ஒரு தந்தைக்கே உரிய பெருமையுடனும், ஆழ்ந்த புரிந்துணர்வுடனும், ”My son is a dominant  influence on me” என்று ஷோரி குறிப்பிடிருந்தார். ஒரு அறிவுஜீவியாக மட்டுமே பெரும்பாலும் அறியப் பட்டிருக்கும் அருண் ஷோரியின் பாச உணர்வும், மனித நேயமும் அதே அளவு ஆழம் கொண்டவை என்பது குறிப்பிடத் தக்கது.
இன்று வரை ஒரு நம்பிக்கையாளராக அல்லாமல், ஞானவாதியாகவே (agnostic) தொடரும் அருண் ஷோரி தனது ஆன்மிகத் தேடல்களின் ஊடாக கீதை,  உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் உள்ளிட்ட இந்து ஞான நூல்களையும், பிற மதங்களையும், காந்தியையும் ஆழ்ந்து பயின்றார்.    இருளில் மூழ்கியதாகவும், அழிக்கப் படவேண்டியதாகவும் கிறிஸ்தவ மிஷநரிகள் தொடர்ந்து சித்தரித்து வந்த இந்து மரபுகளின் விசாலத் தன்மையையும், அழகையும், உன்னதத்தையும் கண்டறியும் புள்ளியில் இருந்தே இந்த நூலில் அவரது ஆய்வுகள் ஆரம்பிக்கின்றன. Premises and Consequences  என்ற நூலின் முதல் பகுதியில் ஷோரி எழுதுகிறார் -
”இந்து மரபுகள் ..  எந்த அளவிற்கு பூரணமான பிரபஞ்ச தரிசனம் சாத்தியமோ, அதைத் தொட முயன்றன. (மதம் என்கிற) இந்த மகாசமுத்திரத்தை முதன் முதலில் ருசி கண்டவை இந்து தரிசனங்களே.  மரத்தை வழிபடும் பழங்குடியினரும்,  காளையை, யானையை, சிங்கத்தை, நாகங்களை வழிபட்டு வந்தவர்களும் இங்கே  “மிருக இயல்பாளர்கள்” என்று இழித்துரைக்கப் படவில்லை.   அவர்களது வழிபாட்டுக் கூறுகளும் மரியாதையுடன்  தெய்வீகக் கணங்களில் சேர்த்துக் கொள்ளப் பட்டன… இது ஒரு யுக்தியாகவோ, தந்திரமாகவோ செய்யப் படவில்லை,  மாறாக  இந்த இணைத்துக் கொள்ளும் தன்மை ஆழ்ந்து  அனுபவித்தறிந்த ஆன்மிக மெய்யுணர்வின் அடிப்படையில் முழுமையான புரிதலுடன் கூடியதாகவே இருந்தது… ஒவ்வொன்றும் மாறுதலுக்கும், சீரமைப்புக்கும் உட்பட்டது தான் என்பதை இயல்பான ஒரு விஷயமாகவே  இந்து மரபு கருதியது..  இதனால் விளையும் மோதல்களை  சமன்வயப் படுத்த மிக அழகிய சொல்லாடல்களையும் அது உருவாக்கியது” – Missionaries in India,  பக்கம் 41-42
”ஆனால் இது எல்லாவற்றையுமே மிஷநரிகள் திரிபுகளுக்கு உட்படுத்தி இழித்துரைத்தனர்.  இணைப்புத் தன்மையை  பிற  மதங்களை முழுங்குவதற்கான  குயுக்தி என்று கண்டித்தனர்;   முரணியக்கமாக விரிவடைந்து செல்லும் தத்துவ விவாதங்களை  வெற்றுக் கூச்சல் என்றனர்; கட்டற்ற சுதந்திரத் தன்மையை  ”கருத்து ரீதியான பலவீனம்” என்று கூறினர். உள்முகப் பட்ட ஞானத் தேடலை ”நோயுற்ற சுய வெறுப்பு” என்று ஏளனம் செய்தனர். சத்தியத்தை நோக்கிச் செல்லப் பல வழிகள் உண்டு என்று காட்டுவதை  வழவழாத் தன்மை என்று கேலி செய்தனர். எல்லையற்ற பரம்பொருளுக்கு எல்லையற்ற பல வடிவங்கள் உண்டு என்பதை “குழப்படி” என்று முத்திரை குத்தினர்.  கருத்துச் சுதந்திரம் என்பதற்கு  “கிறிஸ்தவ மதத்தை மேன்மையானதாகச் சித்தரிப்பதும், இந்து மதத்தை இழித்துரைப்பதும்” என்று பொருள் கண்டனர்.  …. மதமாற்றம் என்பது ஒரு செயல்பாடு மட்டுமல்ல, அது தான் கிறிஸ்தவத்தின் உயிர்நாடியே என்னும் வகையில் மதப் பரவலை நிகழ்த்தினர்.   ஆனால் ஒரு சுவாமி சிரத்தானந்தர் (ஆரிய சமாஜத் துறவி) கிள்ம்பி இந்துமதம் திரும்ப விழைபவர்களுக்காக  வழிமுறைகளை உருவாக்குவதைக் கண்டு “இதற்கு இந்து மத சம்பிரதாயங்களின் படி இடமே கிடையாது”  என்று தீவிர பிரசாரம் செய்தனர்! ” – Missionaries in India,  பக்கம் 43.
God is Truth
இந்த மிஷநரிகள் ஏன் இப்படிக் கருதுகிறார்கள், பேசுகிறார்கள்? இந்து தர்மத்தின் வளமையை அவர்களால் ஏன் உணர முடிவதில்லை?  அதன் பல்வேறு அழகிய பரிமாணங்களை அவர்களுக்கு ஏன் ரசிக்கத் தோன்றுவதில்லை? மகாத்மா காந்திக்கும், போலந்தைச் சேர்ந்த கிறிஸ்தவப் பேராசிரியரான க்ரெசன்ஸ்கி (Krzenski) என்பவருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு உரையாடல் வழியாக இதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் அருண் ஷோரி. அந்த சுவாரஸ்யமான உரையாடலில் காந்தி பல முறை தனது தார்மீக, சத்திய வாதங்களை வைக்கிறார். கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தை நிறுத்த வேண்டும் என்கிறார். ஆனால் க்ரெசன்ஸ்கி “கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான மதம், மற்றதெல்லாம் பொய்” என்பதையே பலவிதமாக மறுபடி மறுபடி கூறிக் கொண்டிருக்கிறார்.  ”கிறிஸ்தவ மதமாற்றம் என்பது ஒரு அபாயகரமான கொடு விஷம்” (the idea of Conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth) என்ற காந்திஜியின் பிரபல மேற்கோள் இந்த உரையாடலின் போது பேராசிரியரை நோக்கி அவர் கூறியதே ஆகும். (இந்த உரையாடல் முழுமையாக Missionaries நூலில் தரப்பட்டுள்ளது).   ஷோரி எழுதுகிறார் –
“அதில் ஆச்சரியப் பட ஏதுமில்லை..  ஏனென்றால், கிறிஸ்தவத்தின் உண்மையான, அதிகாரபூர்வமான கருத்தும் அதுவே தான். ”வெளிப்படுத்தப் பட்ட”,  இறுதிநாள், இறுதித் தீர்ப்பை நம்புகிற எந்த ஒரு சித்தாந்தமும் – கிறிஸ்தவமும் சரி, இஸ்லாமும் சரி,  மார்க்சிய-லெனினிய- மாவோயிசங்களும் சரி இந்த நிலைப்பாடு கொண்டவை தான்:  ஒரே சத்தியம்,  அது அந்த ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தப் பட்டு விட்ட்து..  அவனால், அவன் சார்பாக அந்த ஒரே புத்தகத்தில் அது பதிவு செய்யப் பட்டு விட்டது.  அந்த ஒரே நூலின் சொற்கள் நேரடியாகப் புரிந்து கொள்ளக் கடினமானவை (!!!) என்பதால்,  உலகம் அனைத்தும் அவற்றை நடைமுறைப் படுத்தும் ஒரு நிறுவனத்திற்கு, ஒரு இடைத்தரகருக்கு, ஒரு “ஏஜென்ஸி”க்கு அடிணிய வேண்டும்.. அனைத்துலகமும்  இதை ஏற்றுக் கொள்ளும்  “இறுதி நாளில்”  தான் உலகனைத்தும் ஒளி உண்டாகும்; எனவே அந்த நாளை வரச் செய்ய வேண்டியது  ஏஜென்ஸியின் இன்றியமையாத கடமையாகிறது..  அந்த “ஒளி”  “காட்டப் படும்” அதை மறுப்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள்,  தங்களைத் துன்புறுத்திக் கொள்வது மட்டுமல்ல,  தேவனின்  ஆணைக்கும்,  அல்லாஹ்வின் இறை விருப்பத்திற்கும்  (அல்லது, கம்யூனிசத்தின் படி “சரித்திரத்திற்கும்”)  குறுக்கே வருகிறார்கள் என்றே ஏஜென்ஸி கருத வேண்டியாகிறது.. ஆக,  இதிலிருந்து தெளிவாகப் புலனாவது என்னவென்றால், சர்ச் மதம் மாற்றியே ஆக வேண்டும்,  மாவோ புரட்சியை ஏற்றுமதி செய்தே ஆக வேண்டும்;  கொமெய்னி இறைத்தூதரை பலவந்தமாக அறிவித்தே ஆகவேண்டும்..  அவர்கள் யாரும் செய்யாமல் தப்பிக்கவே முடியாத கடமைகள் இவை”.   (Missionaries, பக்கம் 12).
இதைத்  தொடர்ந்து, ஏஜென்ஸியின் பரவலையும், வீச்சையும் நிரூபிக்கும்  பல ஆதாரபூர்வமான விவரங்களை ஷோரி அளிக்கிறார். ”உலகளாவிய கிறிஸ்தவத்தை நடத்திச் செல்ல வருடந்தோறும் 145 பில்லியன் டாலர்கள் தேவைப் படுகின்றன”  (1990களில்) என்று கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றே கணக்கிடுகிறது.  1989ம் வருட விவரங்களின் படி,  உலகெங்கும் 40 லட்சம் முழுநேரப் பணியாளர்கள், 1800 கிறிஸ்தவ டிவி மற்றும் ரேடியோ சேனல்கள், சுமார் 3 லட்சம் வெளிநாட்டு மிஷநரிகள், அவர்களைப் பயிற்றுவிக்க 1000க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள்…”  என்று போகிறது இந்தப் பழைய கணக்கு.
போர்ச்சுகீசிய காலனிய ஆதிக்கக் காலத்திலிருந்தே இந்தியா ஒரு முக்கிய இலக்காக கிறிஸ்தவ வரைபடத்தில் இருந்து வருகிறது. 1986ல் வெளிவந்த  Mission Handbook: North American Overseas  என்ற ஆவணத்தின்படி, மொத்தம் ஒரு லட்சம்  மிஷநரிகள் (பாதிரியார்கள் போதகர்கள், மதப்பிரசாரகர்கள்) அந்த ஆண்டில் இந்தியாவில் செயல்பட்டு வந்தனர். 1971 முதல் 1983க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் முழுநேர மிஷநரி நிறுவன அமைப்புகளின் எண்ணிக்கை 420லிருந்து 2941 ஆக உயர்ந்தது. பின்வரும் வருடங்களில் மேன்மேலும் உயர்த்தத் திட்டம் தீட்டப் பட்டிருந்தது. தமிழகம், ஆந்திரம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்தவர்களே இல்லாத இடங்களில் எல்லாம் கூட ஆயிரக்கணக்கில் சர்ச்களை நடுவதற்கான  திட்டமும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.  இத்தகைய பல விவரங்களை அருண் ஷோரி அளித்துச் செல்கிறார். தற்போதைய நிலவரங்களின் படி இந்தப் புள்ளி விவரங்கள் எவ்வளவு பூதாகரமாக வளர்ந்திருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
கிறிஸ்தவ பிரசாரகர்களே ‘எண்ணிக்கை விளையாட்டு’ (game of numbers)  என்று எரிச்சலுடனும், சலிப்புடனும் குறிப்பிடும் இந்த வைரஸ்தனமான பரவல் எங்கெங்கெங்கு, எப்படியெல்லாம் விரியும் என்பதற்கு மிஷநரிகள் எந்தக் கட்டுப் பாடும் வைத்துக் கொள்ளவில்லை..  கிடைக்கக் கிடைக்க லாபம் என்ற கண்ணோட்டம் தான். வட அமெரிக்காவிலும்,  தென் அமெரிக்காலும், ஆசியாவிலும் மதப் பரவலுக்காக எந்த விதமான வன்முறையையும், பலவந்தத்தையும் பிரயோகிக்க மிஷநரிகள் தயங்கவில்லை என்பதை நிரூபிக்க மலை மலையாக ஆவணங்கள் குவிந்து கிடக்கின்றன.  பஞ்சம் மற்றும் தட்டுப் பாடுகளின் போது,  மனந்திரும்புவர்களின் எண்ணிக்கை மிகப் பெருமளவில் இருக்கிறது என்றும் இவை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றன.
1823ல் கத்தோலிக்க சர்ச் வெளியிட்ட “இந்தியாவின் மிஷன்கள்” (India and its Missions)  என்ற நூலில் உள்ள “பஞ்சம் மற்றும் காலராவின் ஆன்மிக சாதகங்கள்” (Spiritual Advantages of Famine and Cholera)  என்ற கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை ஷோரி எடுத்துக் காட்டுகிறார்.  இதில், பாண்டிச்சேரியின் ஆர்ச் பிஷப் ஐரோப்பாவில் இருக்கும் தன் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்,
“பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது.  போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன (“starving little tots fly in masses to heaven”). மருத்துவமனையே விசுவாசிகள் கூட்டமாகி விடுகிறது.  நெடுஞ்சாலைகளிலும், முனைகளிலும் நின்று அவர்களை “வற்புறுத்தி அழைத்து வர”  (புனித லூக்காவின் சுவிசேஷம், 14.23) வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாமாகவே வருகிறார்கள்!”  (Missionaries, பக்கம் 15).
நிறுவன கிறிஸ்தவத்தின் ஊடுருவல் யுக்திகள் சாதாரணமானவை அல்ல. எதிரெதிர் சக்திகள் என்று எண்ணப் பட்டவை கூட அதன் பரவலுக்கான மறைமுக உதவிகளாகவே இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவற்றை  ”வேலைப் பங்கீடு” (Division of Labour)  என்ற நூலின் இரண்டாம் பகுதியில் ஷோரி விவரிக்கிறார்.
(தொடரும்) 
 

Popular Posts

Free Blogger Templates

Popular Posts this month

Popular Posts this week